
இந்த ஆண்டு ஆப்பிள், சாம்சங் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்கள் தங்கள் புதிய ஃபிளாக்ஷிப் போன்களை அறிமுகப்படுத்தின. ஆனால், டிசைன் மற்றும் ஹார்டுவேரில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லை என்றே சொல்லலாம். ஸ்மார்ட்போன் சந்தை ஒரு தேக்க நிலையை அடைந்துவிட்டதோ என்ற சந்தேகம் எழும் நிலையில், 2026-ம் ஆண்டு ஸ்மார்ட்போன் உலகில் என்னென்ன மாற்றங்கள் நிகழப்போகிறது? என்பதை இங்கே விரிவாகப் பார்ப்போம்.
அடுத்த ஆண்டு ஸ்மார்ட்போன்களின் விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளது. குறிப்பாக 16GB ரேம் கொண்ட போன்கள் கிடைப்பது அரிதாகலாம். சிஎன்பிசி (CNBC) அறிக்கையின்படி, செயற்கை நுண்ணறிவு (AI) டேட்டா சென்டர்களின் தேவை அதிகரித்துள்ளதால், என்விடியா (Nvidia) சிப்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்த சிப்கள் இயங்க DRAM (டைனமிக் ரேண்டம்-அணுகல் நினைவகம்) மிக அவசியம். மொபைல் போன்களுக்கும் இதே DRAM தேவைப்படுவதால், தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்துள்ளது. பட்ஜெட் போன்களுக்கான மூலப்பொருட்களின் விலை 30 சதவீதமும், உயர் ரக போன்களுக்கு 15 சதவீதமும் அதிகரித்துள்ளதால், இந்த சுமை வாடிக்கையாளர்கள் தலையில்தான் விடியும்.
ஹார்டுவேரில் பெரிய மாற்றங்களைச் செய்ய முடியாததால், நிறுவனங்கள் இப்போது சாஃப்ட்வேர் மற்றும் AI பக்கம் திரும்பியுள்ளன. அடுத்த ஆண்டு, பாதுகாப்பான மற்றும் உடனடி செயல்பாட்டிற்காகத் தனித்துவமான NPU (Neural Processing Units) சிப்கள் பொருத்தப்பட்ட போன்கள் அதிகம் வரும்.
• கூகுள்: டென்சர் G5 சிப்செட்டில் ஏற்கனவே ஜெனரேட்டிவ் AI-க்காக G4-ஐ விட 60 சதவீதம் அதிகத் திறன் கொண்ட TPU உள்ளது.
• ஆப்பிள்: A19 சிப்களில் சிரி (Siri) மற்றும் லோக்கல் AI மாடல்களின் வேகத்தை அதிகரிக்க 16-கோர் நியூரல் இன்ஜின் சேர்க்கப்பட்டுள்ளது.
போனுக்குள்ளேயே AI வேலை செய்வதால் (On-device AI), ஹார்டுவேர் அதிக வெப்பத்தை வெளியிடும். இதைச் சமாளிக்க மேம்பட்ட கூலிங் சிஸ்டம்கள் அவசியம். ஆப்பிள் சமீபத்தில் ஐபோன் 17 ப்ரோ தொடரில் வேப்பர் கூலிங் சேம்பரை (Vapour Cooling Chamber) அறிமுகப்படுத்தியது. 2026-ல் பல நிறுவனங்கள் புதிய வகை வெப்பத் தணிப்புத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீன நிறுவனங்கள் ஏற்கனவே 10,000mAh திறன் கொண்ட சிலிக்கான்-கார்பன் பேட்டரிகளை அறிமுகப்படுத்திவிட்டன. ஆப்பிள், கூகுள் போன்ற நிறுவனங்கள் இதில் தயக்கம் காட்டினாலும், தொழில்நுட்பம் முதிர்ச்சியடைவதால் 2026-ல் இவர்களும் அதிகத் திறன் கொண்ட பேட்டரிகளை வழங்க வாய்ப்புள்ளது. மேலும், சீனப் போன்களுக்கு இணையாகச் சார்ஜிங் வேகத்தையும் அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் பெரிய நிறுவனங்கள் உள்ளன.
டிஸ்பிளேவுக்கு அடியில் கேமராவை வைக்கும் தொழில்நுட்பம் (UDC) புதிதல்ல, ஆனால் அது இதுவரை பிரீமியம் போன்களில் மட்டுமே இருந்தது. விலையேற்றத்தை நியாயப்படுத்த, 2026-ல் இந்தத் தொழில்நுட்பம் பரவலாக வரலாம். இதன் மூலம் நாட்ச் (Notch) அல்லது துளைகள் இல்லாத முழுமையான 'எட்ஜ்-டூ-எட்ஜ்' (Edge-to-Edge) திரையை நாம் பெற முடியும்.
அடுத்த ஆண்டு மடிக்கக்கூடிய (Foldable) போன்களின் வரவு அதிகரிக்கும். சாம்சங் ஏற்கனவே தனது கேலக்ஸி Z ட்ரைஃபோல்ட் (TriFold) மாடலை அறிமுகப்படுத்திவிட்டது. ஆப்பிள் நிறுவனமும் 2026-ல் தனது சொந்த மடிப்புத் திரை போனை அறிமுகப்படுத்தலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சியோமியும் (Xiaomi) மூன்று மடிப்பு கொண்ட போனை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இறுதியாக, கேமராத் துறையில் பெரிய மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது. ஆப்டிக்கல் ஜூம் மற்றும் AI மென்பொருள் மூலம் புகைப்படங்களின் தரத்தை மேம்படுத்துவதிலேயே நிறுவனங்கள் கவனம் செலுத்தும். இது சிறப்பான புகைப்படங்களைக் கொடுத்தாலும், வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் மிகப்பெரிய மாற்றமாக இருக்காது.