இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, ரீசார்ஜ் செய்யாத சிம் கார்டுகளுக்கான இலவச இன்கமிங் சேவையை நிறுத்தத் தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ரீசார்ஜ் காலாவதியான பிறகும் சிம் கார்டைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதுவரை ஜியோவில் ரீசார்ஜ் திட்டத்தின் வேலிடிட்டி முடிந்தாலும், பல சந்தர்ப்பங்களில் இன்கமிங்களைப் பெற முடிந்தது. இதனால், அவசரத் தேவைகளுக்காகவோ அல்லது இரண்டாவது சிம் கார்டாகவோ ஜியோ எண்ணைப் பயன்படுத்துபவர்கள் உடனடியாக ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. ஆனால், தற்போது இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரீசார்ஜ் முடிந்தால் எப்போது வேண்டுமானாலும் அழைப்புகள் நிறுத்தப்படலாம்!
சமூக வலைதளமான எக்ஸ் (X) தளத்தில் அபிஷேக் யாதவ் என்ற தொழில்நுட்பத் தகவல் பகிர்வாளர், ஜியோ வாடிக்கையாளர் ஒருவருக்குக் கிடைத்த குறுஞ்செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டைப் பகிர்ந்துள்ளார்.
அதில், வாடிக்கையாளரின் கடைசி ரீசார்ஜ் திட்டம் காலாவதியாகிவிட்டதாகவும், இனி எந்த நேரத்திலும் இன்கமிங் நிறுத்தப்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் செய்தி ஜியோவின் தானியங்கி தகவல் அனுப்பும் அமைப்பு மூலம் அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த மாற்றம் குறிப்பிட்ட தொலைத்தொடர்பு வட்டத்தில் (Telecom Circle) மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளதா அல்லது நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளதா என்பது குறித்துத் தெளிவான தகவல் இல்லை.
மேலும், இந்த விவகாரம் குறித்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, இதனை உறுதிப்படுத்தப்பட்ட நாடு தழுவிய புதிய விதிமுறையாகக் கருத முடியாது.