குழந்தைகள், பெரியவர்களுக்காக புதிய நோக்கியா கைப்பேசி: திறன்பேசிகளில் ஏராளமான செயலிகள், விளையாட்டுகள், சமூக வலைத்தளங்கள் எனப் பல வசதிகள் உள்ளன. ஆனால், குழந்தைகள் அவற்றைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த விரும்பும் பெற்றோர்களுக்கும், எளிமையான கைப்பேசியைத் தேடும் வயதானவர்களுக்கும் சாதாரண பொத்தான் கைப்பேசிகளே சிறந்த தேர்வாக இருக்கலாம். இந்தத் தேவையைக் கருத்தில் கொண்டு புதிய Nokia 2360 Flip மடிக்கக்கூடிய கைப்பேசியை அறிமுகப்படுத்தியுள்ளது HMD நிறுவனம்.
இதில் பெரிய பட்டன்கள் கொண்ட விசைப்பலகை, இரண்டு திரைகள், அவசரகால அழைப்பு வசதி உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, குழந்தைகளின் கைப்பேசி பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உதவும் வசதிகளும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. இணையதளச் செயலிகள் நிறைந்த திறன்பேசியை விட அடிப்படை அழைப்பு, குறுஞ்செய்தி வசதிகள் மட்டும் போதும் என்று நினைப்பவர்களுக்கு இந்தப் புதிய மாடல் கவனம் ஈர்க்கக்கூடும். இருப்பினும், இது இந்தியாவில் எப்போது விற்பனைக்கு வரும், என்ன விலையில் கிடைக்கும் என்ற விவரங்களை நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.
குடும்பத்தினரே தொலைவிலிருந்து கட்டுப்படுத்தலாம்:
இந்தக் கைப்பேசியின் முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்று Family Assist வசதி. இதன் மூலம் குடும்ப உறுப்பினர் ஒருவர் தங்களுடைய Android அல்லது iPhone கைப்பேசியைப் பயன்படுத்தி Nokia 2360 Flip-இல் சில அமைப்புகளை மாற்ற முடியும். உதாரணமாக, புதிய தொலைபேசி எண்களைச் சேர்ப்பது, நினைவூட்டல்களை அமைப்பது, ஒலியளவை மாற்றுவது, அவசர அழைப்பு அமைப்புகளைத் திருத்துவது போன்றவற்றைச் செய்யலாம்.
இந்த வசதி குறுஞ்செய்தி வழியாகச் செயல்படுவதால், இதற்காகத் தனியாக இணைய இணைப்பு அல்லது கைப்பேசி இணையத் திட்டம் தேவையில்லை. குழந்தைகள் பயன்படுத்துவதற்காக School Mode மற்றும் Parental Control வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் குழந்தைகள் எந்த எண்களுக்குத் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளலாம், யாருக்குக் குறுஞ்செய்தி அனுப்பலாம் என்பதைப் பெற்றோர்கள் கட்டுப்படுத்த முடியும். இந்த அமைப்புகளை Family PIN மூலம் பூட்டியும் வைக்கலாம். இதனால் குழந்தைகள் தாங்களாகவே கட்டுப்பாடுகளை மாற்றுவதைத் தடுக்க முடியும். ஆனால், இந்த வசதிகளின் முழுமையான செயல்பாடு மற்றும் கிடைக்கும் தன்மை சந்தைக்கு ஏற்ப மாறக்கூடும்.