பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கு அடிப்படையான கார்பன், 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு விண்வெளியிலிருந்து விழுந்த பழமையான விண்கற்கள் மூலமாகப் பூமியின் மையப்பகுதியில் (Core) சேமிக்கப்பட்டிருக்கலாம் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் கார்பன் (Carbon) மிக அடிப்படையானது. ஆனால், இந்தக் கார்பன் பூமிக்கு முதலில் எங்கிருந்து வந்தது என்ற கேள்விக்கு விஞ்ஞானிகள் இன்னும் விடை தேடி வருகின்றனர். இந்நிலையில், ஹவாய் தீவின் எரிமலைப் பாறைகளில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வு, பூமியின் மையப்பகுதியில் (Core) இருந்து 4.5 பில்லியன் ஆண்டுகள் பழமையான கார்பன் கசிந்து பூமியின் மேற்பரப்பிற்கு வந்து கொண்டிருக்கலாம் என்ற ஆச்சரியமூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது.
24
பூமியின் ஆழத்திலிருந்து வெளிவரும் தடயங்கள்
கொலம்பியா பல்கலை.தலைமையிலான ஆராய்ச்சிக் குழு, ஹவாயில் உள்ள கிலாவியா (Kīlauea) மற்றும் டான்டலஸ் ரிஃப்ட் (Tantalus Rift) எரிமலைப் பாறைகளை ஆய்வு செய்தது. 'நேஷனல் அகாடமி ஆஃப் சயின்சஸ்' (PNAS) இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வில், எரிமலைக் குழம்பில் (Magma) உருவான நுண்ணிய படிகங்களுக்குள் சிக்கியிருந்த வாயுத் துளிகள் ஆராயப்பட்டன.
பூமியின் மையப்பகுதியை நேரடியாகச் சென்று ஆராய்வது தற்போதைய தொழில்நுட்பத்தில் சாத்தியமில்லை. ஆனால், பூமியின் மையப்பகுதிக்கும் மேலடுக்கிற்கும் (Mantle) இடையே இருந்து மேல்நோக்கி எழும்பும் வெப்பப் பாறைத் தூண்கள் (Mantle plumes), எரிமலைகள் வழியாக உள்ளிருக்கும் தாதுக்களை வெளியே கொண்டு வருகின்றன.
34
வித்தியாசமான கார்பன் ஐசோடோப்புகள்
வழக்கமாகப் பூமியின் மேலடுக்கில் உள்ள கார்பனின் ஐசோடோப் அளவு (-5 முதல் -7 per mil) ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் இருக்கும். ஆனால், கிலாவியா எரிமலைப் பாறைகளில் கண்டறியப்பட்ட கார்பன் ஐசோடோப் அளவு (-1 per mil) வழக்கத்திற்கு மாறாக மிகவும் கனமானதாக இருந்தது. இது பூமியின் மையப்பகுதியிலிருந்து கசிந்து வந்த கார்பனாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
இந்த அரிய கார்பன் தடயத்தை, 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூரிய குடும்பம் உருவானபோது இருந்த 'கார்பனேசியஸ் காண்ட்ரைட்ஸ்' (Carbonaceous chondrites) எனப்படும் பழமையான விண்கற்களுடன் விஞ்ஞானிகள் ஒப்பிட்டனர். இரண்டும் ஒத்துப்போவதைக் கண்டறிந்தனர்.
பூமி உருவான ஆரம்பக் காலகட்டத்தில், விண்வெளியிலிருந்து விழுந்த இந்தக் கார்பன் நிறைந்த விண்கற்கள் பூமியின் ஆழமான மையப்பகுதியில் சேமிக்கப்பட்டிருக்கலாம். பின்னர் பல பில்லியன் ஆண்டுகளாக அவை மெல்ல மேல்நோக்கி நகர்ந்து, எரிமலை வெடிப்புகள் மூலம் பூமியின் மேற்பரப்பிற்கு வந்து, இன்று மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களின் உடலிலும் ஒரு அங்கமாக மாறியிருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.