இன்றைய TOP 10 செய்திகள்: ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்.. புயலுக்குள் புகுந்த விமானம்..

Published : Oct 28, 2025, 11:35 PM IST

தவெக தலைவர் விஜய் அறிக்கை, 8வது ஊதியக் குழு அறிவிப்பு, டிரம்பின் புதிய விதிகள், எலான் மஸ்கின் க்ரோகிபீடியா உள்ளிட்ட இன்றைய TOP 10 செய்திகளை அறிந்துகொள்ளுங்கள்.

PREV
110
30 நாட்களுக்குப் பிறகு ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்

தவெக தலைவர் விஜய், தொடர் மழையால் நெல் மூட்டைகள் வீணாகி வருவதைக் கண்டித்து தமிழக அரசுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளார். அரசுக்கு பல கேள்விகளை எழுப்பி, இனியாவது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

210
தவெகவில் புதிய நிர்வாகக் குழு நியமனம்!

வெகவின் அன்றாடப் பணிகளையும் செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க, புதியதாக நிர்வாகக் குழுவை அமைத்து அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதாவது தனது உத்தரவின்பேரில் தவெகவின் செயல்பாடுகளை கண்காணிக்க மொத்தம் 28 பேர் அடங்கிய குழுவை அமைத்துள்ளார் விஜய். இந்த குழுவில் மாநில செயலாளர்கள் மட்டுமின்றி மாவட்ட செயலாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.

310
விவசாயிகளுக்கு குட் நியூஸ்!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகப் பெய்த வடகிழக்குப் பருவமழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு, 33 சதவீதத்திற்கும் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக நிவாரணத் தொகை செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

410
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமானப்பணியா?

சென்னை பள்ளிக்கரணை காப்புக்காடு சதுப்பு நில பகுதியில் அடுக்கு மாடி கட்டடம் கட்ட தமிழக அரசு அனுமதி வழங்கியதாக செய்திகள் வெளியாகி இருந்தன. விதிகளை மீறி சதுப்பு நில பகுதியில் கட்டுமான பணிக்கு அனுமதி வழங்கியதாக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி, அன்புமணி கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், சதுப்பு நிலத்தில் கட்டுமானப்பணி மேற்கொள்ள அனுமதி வழங்கவில்லை என தமிழக அரசு மறுத்துள்ளது.

510
பீகாரில் கள் விற்பனை - தேஜாஸ்வி வாக்குறுதி

பீகாரில் 'இந்தியா' கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தின் மதுவிலக்குச் சட்டத்தில் இருந்து கள்ளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தள (RJD) தலைவர் தேஜஸ்வி யாதவ் அறிவித்துள்ளார்.

சாரண் மாவட்டத்தில் உள்ள பர்சாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும்போது தேஜஸ்வி யாதவ் இந்த வாக்குறுதியை வழங்கினார். பீகார் சட்டசபைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

610
8வது ஊதியக் குழு

மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட 8-வது மத்திய ஊதியக் குழுவின் (8th Central Pay Commission) தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று (அக்டோபர் 28) ஒப்புதல் வழங்கியுள்ளது.

கடந்த ஜனவரி 16, 2025 அன்று இந்தக் குழுவை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை கொள்கை அளவில் ஒப்புதல் அளித்திருந்தது. இந்நிலையில், தற்போது 10 மாதங்கள் கழித்து, குழுவின் முக்கிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

710
வெளிநாட்டினருக்கு குடைச்சல் கொடுக்கும் டிரம்ப்!

அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றது முதல், குடியேற்றம் மற்றும் வரி விதிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் பல அதிரடி மாற்றங்களைச் செய்து வருகிறார். அந்த வகையில், தற்போது அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) வெளிநாட்டவர்கள் மற்றும் கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் அமெரிக்காவிற்கு வந்து, செல்வது குறித்து புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.

வெளிநாட்டவர்கள் மற்றும் கிரீன் கார்டு உள்ளவர்கள் அமெரிக்காவிற்குள் வரும் போதும், செல்லும் போதும், தங்களது புகைப்படங்கள் மற்றும் கைரேகை உள்ளிட்ட உயிர் அளவீட்டு (Biometric) விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த நடைமுறை டிசம்பர் 26 முதல் அனைத்து நுழைவுப் புள்ளிகளிலும் அமலுக்கு வருகிறது.

810
92 வயதில் மீண்டும் அதிபரான பால் பியா!

ஆப்பிரிக்க நாடான கேமரூனில் கடந்த அக்டோபர் 12 அன்று நடைபெற்ற அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபரும், 92 வயதானவருமான பால் பியா வெற்றி பெற்றதாக அந்நாட்டின் அரசியல் சாசன கவுன்சில் (Constitutional Council) திங்கள்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இருப்பினும், இந்த தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளில் வன்முறைப் போராட்டங்கள் வெடித்துள்ளன.

910
புயலின் கண் பகுதிக்குள் புகுந்த அமெரிக்க விமானம்!

இந்த ஆண்டின் மிக சக்திவாய்ந்த புயலாக கருதப்படும் 'மெலிசா' (Hurricane Melissa) சூறாவளியின் மையப் பகுதிக்குள் (Eye of the Storm) அமெரிக்க விமானப் படையின் (US Air Force) சிறப்பு விமானம் நுழைந்து, அங்கிருந்து காட்சிகளைப் பதிவு செய்துள்ளது.

அமெரிக்க விமானப் படையின் புகழ்பெற்ற "ஹரிகேன் ஹண்டர்ஸ்" (Hurricane Hunters) குழு, 5ஆம் வகை (Category 5) புயலான 'மெலிசா' ஜமைக்காவை நோக்கி நகரும் நிலையில், வானிலை தரவுகளைச் சேகரித்து தேசிய சூறாவளி மையத்திற்கு (National Hurricane Center) அனுப்புவதற்காக இந்த சாகசப் பயணத்தை மேற்கொண்டது.

1010
விக்கிபீடியாவை காப்பி அடிக்கும் க்ரோகிபீடியா!

உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரியுமான எலான் மஸ்கின் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான xAI, விக்கிபீடியாவுக்குப் போட்டியாக 'க்ரோகிபீடியா' (Grokipedia) என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் புதிய இணைய அறிவுத் தளத்தை (Online Knowledge Database) அறிமுகப்படுத்தியுள்ளது.

தொழில்நுட்ப செய்தி நிறுவனமான 'தி வெர்ஜ்' (The Verge), பல க்ரோகிபீடியா கட்டுரைகள் விக்கிபீடியாவில் இருந்து நகல் எடுக்கப்பட்டதாகவோ அல்லது விக்கிபீடியா பக்கங்களின் பகுதிகள் அப்படியே காப்பி அடிக்கப்பட்டதாகவோ தெரிகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories