Published : Sep 11, 2024, 06:55 AM ISTUpdated : Sep 11, 2024, 07:04 AM IST
TASMAC Holiday: இமானுவேல் சேகரனின் நினைவு தினம் இன்று பரமக்குடியில் அனுசரிக்கப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஆண்டு தோறும் செப்டம்பர் 11ம் தேதியன்று சுதந்திரப்போராட்டத் தியாகி இமானுவேல் சேகரன் தினம் குருபூஜையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று 67வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த குருபூஜையில் கலந்து கொள்வதற்காக ராமநாதபுரம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் திமுக, அதிமுக, ஓபிஎஸ், டிடிவி.தினகரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வருகை தருவார்கள்.
25
ramanathapuram
இதற்கான பாதுகாப்பிற்காக ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 6000க்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், 150 கண்காணிப்பு கேமராக்கள், 5 ட்ரோன் கேமராக்கள் மூலமும் காவல் துறையினர் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரை - ராமநாதபுரம் நான்கு வழி சாலை உட்பட மாவட்டம் முழுவதும் 42 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வெளி மாவட்டத்தினர் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்ற வாகனங்கள் மூலம் மட்டுமே பரமக்குடி வந்து செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் பரமக்குடி முழுவதும் கொண்டு வரப்பட்டுள்ளது.
35
school holiday
இந்நிலையில், சுதந்திரப்போராட்டத் தியாகி இம்மானுவேல் சேகரின் நினைவு தினத்தை முன்னிட்டு சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக செப்டம்பர் மாதம் 21ம் தேதி 4 தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வேலை நாட்களாகும்.
அதேபோல் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை ஒட்டி ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்குப் பிரச்னையை பாதுகாக்கவும் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் பொருட்டும் தென் மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், மனமகிழ் மன்றங்கள், தங்கும் விடுதியுடன் கூடிய மதுபானக் கூடங்கள் மற்றும் அயல்நாட்டு மதுபான சில்லரை விற்பனை கடைகள் ஆகியவை மூடப்படும்.
மது விற்பனை தொடர்பான விதிமீறல்கள் ஏதும் நடைபெறாமல் கண்காணிக்கவும் அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.