
தமிழகத்தில் மழை, காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, புயல் உள்ளிட்ட வானிலை மாற்றங்கள் குறித்த தகவல்கள் வெளியாகும்போது பொதுமக்கள் எந்த அறிவிப்பை நம்புவது என்ற குழப்பம் ஏற்படுவது வழக்கம். குறிப்பாக சமூக வலைதளங்களில் தனிநபர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத வானிலை ஆர்வலர்கள் வெளியிடும் கணிப்புகள் வேகமாகப் பரவுகின்றன.
ஆனால், வானிலை தொடர்பான தகவல்களைப் பகிரும்போது பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிடும் அதிகாரப்பூர்வ முன்னறிவிப்புகளையே பின்பற்ற வேண்டும் என்றும், தனிநபர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத அமைப்புகள் வெளியிடும் கணிப்புகளை அரசு சார்ந்த அதிகாரப்பூர்வ முன்னறிவிப்புகளாகக் கருதக் கூடாது என்றும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த அறிவுறுத்தலின் முக்கியத்துவம், பொதுமக்கள் கவனிக்க வேண்டிய அம்சங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ தகவல்களைப் பெறுவதற்கான வழிகள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
வானிலை தொடர்பான தகவல்களை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளப் பயனர்கள் பொறுப்புடன் வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட வலியுறுத்தியுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மட்டுமே நாட்டின் வானிலை நிலவரங்களைக் கண்காணித்து, புயல், மழைப்பொழிவு, இடியுடன் கூடிய மழை உள்ளிட்ட வானிலை நிகழ்வுகள் தொடர்பான அதிகாரப்பூர்வ முன்னறிவிப்புகள், எச்சரிக்கைகள் மற்றும் அறிவுரைகளை வெளியிடும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அமைப்பு என ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
IMD முன்னறிவிப்புகளுக்கு மட்டுமே முன்னுரிமை
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிடும் அதிகாரப்பூர்வ வானிலை முன்னறிவிப்புகள், எச்சரிக்கைகள் மற்றும் அறிவுரைகளையே ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் முதன்மையாகப் பின்பற்ற வேண்டும்
தனிநபர்களின் கணிப்புகளை அதிகாரப்பூர்வமாகக் கருதக்கூடாது
சமூக வலைதளங்களில் தனிநபர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத அமைப்புகள் வெளியிடும் வானிலை கணிப்புகளை அரசின் அதிகாரப்பூர்வ முன்னறிவிப்புகளாகக் கருதவோ, வெளியிடவோ கூடாது.
ஊடகங்கள் தகவல்களைச் சரிபார்க்க வேண்டும்
தொலைக்காட்சி, அச்சு மற்றும் இணையதள ஊடகங்கள், IMD முன்னறிவிப்புகளிலிருந்து மாறுபட்ட தனிநபர்களின் கணிப்புகளை வெளியிடுவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை உரிய முறையில் சரிபார்க்க வேண்டும்.
சுயாதீன ஆய்வுகளுக்கு உரிய விளக்கம் அவசியம்
தனிநபர்கள் அல்லது சுயாதீன வானிலை ஆர்வலர்கள் அறிவியல் அடிப்படையில் தங்களது ஆய்வுகளை வெளியிடலாம். ஆனால், அவை எந்த ஆதாரத்தின் அடிப்படையில் வெளியிடப்படுகின்றன என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். மேலும், அவை IMD வெளியிட்ட அதிகாரப்பூர்வ முன்னறிவிப்புகள் அல்ல என்பதையும் குறிப்பிட வேண்டும்.
அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தும் செய்திகளைத் தவிர்க்க வேண்டும்
புயல், கனமழை போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளின்போது ஆதாரமற்ற கணிப்புகள், சரிபார்க்கப்படாத தகவல்கள் மற்றும் பரபரப்பான செய்திகளை வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும்.
வானிலை தொடர்பான தகவல்கள் பொதுமக்களின் பாதுகாப்பு, அன்றாட வாழ்க்கை மற்றும் அரசின் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளுடன் நேரடியாகத் தொடர்புடையவை. குறிப்பாக, புயல் உருவாகும் காலங்களில் அதன் நகர்வு, கரையைக் கடக்கும் இடம், காற்றின் வேகம், மழையின் அளவு போன்றவற்றைச் சுற்றிப் பல்வேறு கணிப்புகள் வெளியாகின்றன.
ஒரு கணிப்பு தமிழகக் கடற்கரையைப் புயல் நெருங்கும் என்று கூறலாம். மற்றொரு கணிப்பு ஆந்திரப் பகுதியை நோக்கிச் செல்லும் என்று கூறலாம். இத்தகைய முரண்பட்ட தகவல்கள் பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்துகின்றன.
மேலும், பொதுமக்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மீட்புப் பணிகள் மற்றும் அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இதனால், வானிலை தொடர்பான தகவல்களைப் பொறுப்புடன் வெளியிடுவதும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்புவதும் அவசியம் என்று தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள அக்வான் புயல் தொடர்பாகவும் பல்வேறு கணிப்புகள் வெளியாகி வருகின்றன.
புயல் ஆந்திரக் கடற்கரையை நோக்கிச் செல்லும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில், சில தனியார் வானிலை ஆர்வலர்கள் தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகத் தங்களது கணிப்புகளை வெளியிட்டுள்ளனர்.
இதனால் பொதுமக்களிடையே புயலின் பாதை குறித்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் அதிகாரப்பூர்வ முன்னறிவிப்புகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்ற ஆணையத்தின் அறிவுறுத்தியுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD): புயல், மழை, காற்றின் வேகம் மற்றும் மாவட்ட வாரியான வானிலை எச்சரிக்கைகள்.
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் (RMC): தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கைகள்.
தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்: பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அரசின் பாதுகாப்பு அறிவுறுத்தல்கள்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்: அந்தந்த மாவட்டத்திற்கான உள்ளூர் பாதுகாப்பு அறிவிப்புகள்.
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய வேண்டுகோள்
புயல் மற்றும் கனமழை தொடர்பான தகவல்களைப் பார்க்கும்போது சமூக வலைதளங்களில் வரும் ஒவ்வொரு பதிவையும் உண்மை என நம்ப வேண்டாம். குறிப்பாக, புயல் கரையைக் கடக்கும் இடம், தேதி, நேரம் மற்றும் பாதை குறித்த உறுதிப்படுத்தப்படாத தகவல்களை மற்றவர்களுக்குப் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும்.
அரசுத் துறைகள் வெளியிடும் எச்சரிக்கைகளைப் பின்பற்றி, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வதந்திகளைப் பரப்பாமல் இருப்பதும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு உதவும்.