தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை..! எந்த எந்த மாவட்டங்கள் தெரியுமா.? வானிலை மையம் தகவல்

First Published | Nov 17, 2023, 2:33 PM IST

தமிழகத்தில் நாளை மறுதினம் முதல் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள மிதிலி புயல் இன்று இரவு வங்கதேசம் கடற்கரை பகுதியில் கரையை கடக்கும் எனவும் தெரிவித்துள்ளது. 
 

புயல் எப்போது கரையை கடக்கும்

தமிழகத்தில் மழை நிலவரம் தொடர்பாகவும், வங்க கடலில் உருவான புயல் தொடர்பாகவும் வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நேற்று மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று (17-11-2023) காலை 0530 மணி அளவில் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 'மிதிலி' புயலாக வலுப்பெற்றுள்ளது.

  இது வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று (17-11-2023) இரவு வங்கதேச கடற்கரையை கேப்புபாராவிற்கு அருகில் கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என தெரிவித்துள்ளது. 

தமிழகத்திற்கான மழை வாய்ப்பு

மேலும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை மறுதினம் (19.11.2023) கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது;

Latest Videos


தொடரும் கன மழை

20.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை. நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி. தென்காசி, தேனி, விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
 

சென்னை வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வடக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வங்கதேச கடலோரப்பகுதிகள்:

17.11.2023: சூறாவளிக்காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும், மாலை முதல் காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும், அதன் பிறகு படிப்படியாக குறைந்து மாலை முதல் இரவு வரை மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

18.11.2023: காலை வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

click me!