வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி
மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, நேற்று தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் மழை பெய்தது. இன்று 16.07.2024 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 -40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, கோவையில் கன மழை
மேலும் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் வருகிற 21.07.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை நிலவரம்
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 26 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
27 மாவட்டங்களுக்கு அலர்ட்
இதனிடையே இன்று காலை 10 மணி வரை திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், தருமபுரி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.