
தமிழகத்தில் ஒவ்வொரு கிராமத்திற்கும் தனித்துவமான பழக்கவழக்கங்களும் பாரம்பரியங்களும் உள்ளன. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் தனது வித்தியாசமான உணவுப் பழக்கத்தாலும் வாழ்க்கை முறையாலும் கவனம் ஈர்த்துள்ளது. இங்கு வசிக்கும் மக்கள் பல தலைமுறைகளாக அசைவ உணவுகளைத் தவிர்த்து, சைவ உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி மது அருந்துவதைத் தவிர்ப்பது, வரதட்சனை வாங்காமல் திருமணம் நடத்துவது எனப் பல்வேறு தனித்துவமான நடைமுறைகளையும் பின்பற்றி வருவதாகக் கூறுகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அமைந்துள்ளது வாடிமனைப்பட்டி கிராமம். சுமார் 50 குடும்பங்கள் வசிக்கும் இந்த ஊரில், கடந்த 1963ஆம் ஆண்டுக்கு முன்பு வரை மற்ற கிராமங்களைப் போலவே சைவம் மற்றும் அசைவம் என இரண்டு வகையான உணவுகளையும் மக்கள் சாப்பிட்டு வந்துள்ளனர். ஆனால், 1963ஆம் ஆண்டு இவர்களின் உணவுப் பழக்கத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அப்போது வள்ளலார் சுத்த சன்மார்க்க சங்கத்தைச் சேர்ந்த முத்தையா என்ற ஆன்மிகவாதி இந்தக் கிராமத்திற்கு வருகை தந்துள்ளார்.
அவர் ஜீவகாருண்யம், உயிர்களிடத்தில் அன்பு செலுத்துதல் மற்றும் அசைவ உணவைத் தவிர்ப்பது குறித்து கிராம மக்களிடம் எடுத்துரைத்ததாகக் கூறப்படுகிறது. அவரது கருத்துகளால் ஈர்க்கப்பட்ட மக்கள், அன்றிலிருந்து அசைவ உணவுகளைத் தவிர்த்து முழுமையான சைவ வாழ்க்கை முறைக்கு மாறியுள்ளனர்.
அசைவ உணவுகளைச் சாப்பிடுவதை நிறுத்தியதுடன், அதற்கான சூழலையும் தவிர்க்க வேண்டும் என்று கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் வீடுகளில் ஆடு, கோழி போன்றவற்றை வளர்ப்பதையும் கைவிட்டுள்ளனர். தற்போது இந்தக் கிராமத்தில் பசு மாடுகளை மட்டுமே வளர்த்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். ஊரில் உள்ள கண்மாயில் மீன்கள் இருந்தாலும் அவற்றைப் பிடிப்பதோ, உணவுக்காகப் பயன்படுத்துவதோ கிடையாது என்கிறார்கள். திருமணமாகி இந்தக் கிராமத்திற்கு வரும் பெண்கள், ஏற்கெனவே அசைவ உணவு சாப்பிடும் பழக்கம் கொண்டவர்களாக இருந்தாலும், திருமணத்திற்குப் பிறகு குடும்பத்தின் சைவ உணவுப் பழக்கத்தைப் பின்பற்றத் தொடங்குவதாகக் கூறப்படுகிறது.
உணவுப் பழக்கத்தில் மட்டுமல்லாமல், மது அருந்துவதைத் தவிர்ப்பதிலும் இந்தக் கிராம மக்கள் உறுதியாக இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். கிராமத்தில் உள்ள பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை யாருக்கும் மது அருந்தும் பழக்கம் இல்லை என்றும், தங்கள் ஊரைச் சேர்ந்தவர்கள் டாஸ்மாக் கடைகளுக்குச் செல்வதில்லை என்றும் அப்பகுதி மக்கள் பெருமையுடன் கூறுகின்றனர். வள்ளலாரின் கொள்கைகளைப் பின்பற்றி ஒழுக்கமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பதே தங்களின் நோக்கம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தக் கிராமத்தின் மற்றொரு சிறப்பம்சமாக அதன் திருமண நடைமுறைகள் குறிப்பிடப்படுகின்றன. ஆடம்பரத்திற்கும் தேவையற்ற செலவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல், திருமணங்களை மிகவும் எளிமையாக நடத்துவதாகக் கூறுகின்றனர். குறிப்பாக, திருமணத்தின்போது வேத மந்திரங்கள் ஓதப்படுவதில்லை என்றும், மணமகள் வீட்டாரிடம் வரதட்சனை கேட்கும் பழக்கமும் இல்லை என்றும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல், ஊரில் பெரிய அளவிலான அடிதடி, தகராறு போன்ற சம்பவங்கள் நடைபெறுவதில்லை என்றும், காவல் நிலையத்திற்குச் செல்லும் அளவுக்குப் பிரச்சினைகள் ஏற்பட்டதில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
தங்களது சைவ உணவுப் பழக்கமும் ஒழுக்கமான வாழ்க்கை முறையும் ஆரோக்கியமாக வாழ உதவுவதாக இந்தக் கிராம மக்கள் நம்புகின்றனர். ஊரில் 80 வயதைக் கடந்த முதியவர்கள் பலர் இருப்பதாகவும், சிலர் 105 வயது வரை வாழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். சைவ உணவைப் பின்பற்றுவதால் தங்களுக்குப் பெரிய அளவில் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதில்லை என்பதும் கிராம மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
1963ஆம் ஆண்டு தொடங்கியதாகக் கூறப்படும் இந்த வாழ்க்கை முறை, தற்போது 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வருகிறது. காலத்திற்கு ஏற்ப பல கிராமங்களின் பழக்கவழக்கங்கள் மாறிவரும் நிலையில், வாடிமனைப்பட்டி மக்கள் தாங்கள் ஏற்றுக்கொண்ட கொள்கைகளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.