இந்தத் திட்டத்தின் கீழ் உற்பத்தியாகும் மின்சாரத்தில் பயன்படுத்திய பிறகு மீதமுள்ள மின்சாரத்தை மின் வலையமைப்புக்கு (Grid) அனுப்பும் நெட் மீட்டரிங் வசதியும் வழங்கப்படும். இதன் மூலம் மின் கட்டணத்தில் சலுகை பெறுவதோடு, சிலருக்கு கூடுதல் வருவாய் ஈட்டும் வாய்ப்பும் உருவாகும். சூரிய ஆற்றலை அதிகமாக பயன்படுத்துவதன் மூலம் நிலக்கரி உள்ளிட்ட மரபு எரிபொருட்களின் பயன்பாடு குறையும். இதனால் கார்பன் உமிழ்வு குறைந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் இந்தத் திட்டம் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி விண்ணப்பிக்கலாம்?
இந்த மானியத் திட்டம் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை (TEDA) மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) இணைந்து செயல்படுத்த உள்ளன. தகுதியான மின் நுகர்வோர், தங்களது மின் இணைப்பு விவரங்கள் மற்றும் தேவையான ஆவணங்களுடன் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க முடியும். சோலார் மானியத் திட்டத்துடன் சேர்த்து, மாணவர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களை மையமாகக் கொண்டு பல புதிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
வீட்டு மின் செலவைக் குறைக்கும் சோலார் மானியத் திட்டம் முதல் கல்வி, தொழில்நுட்பம், பெண்கள் நலன் வரை பல்வேறு துறைகளை உள்ளடக்கிய இந்த பட்ஜெட் அறிவிப்புகள், பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு பல புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.