சுபமுகூர்த்த நாட்களான வரும் 24ம் தேதி மற்றும் 27ம் தேதிகளில் பத்திரப் பதிவு அலுவலகங்களில் கூடுதலாக டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் சொத்துகளை வாங்குபவர்கள் பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் சுமார் 582 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இங்கு நாளுக்கு நாள் பத்திரப் பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அரசுக்கு வருமானம் கொட்டுகிறது. முகூர்த்த நாட்களிலும், விஷேச தினங்களிலும் அதிக அளவு பத்திரப்பதிவு நடைபெறும் என்பதால் பத்திரப்பதிவு துறை சார்பில் அந்த நாட்களில் அதிக அளவிலான டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
23
2 நாட்கள் கூடுதல் டோக்கன்கள்
இந்நிலையில், ஐப்பசி மாதத்தில் சுபமுகூர்த்த நாட்களான வரும் 24ம் தேதி மற்றும் 27ம் தேதிகளில் கூடுதலாக டோக்கன்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பதிவுத்துறை தலைவர் வெளியிட்ட அறிவிப்பு: மங்களகரமான தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
பொதுமக்களின் கோரிக்கை
தற்போது ஐப்பசி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த நாட்களான 24.10.2025 மற்றும் 27.10.2025 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
33
சுபமுகூர்த்த நாட்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்
இதனை ஏற்று ஐப்பசி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த நாட்களான 24.10.2025 மற்றும் 27.10.2025 தேதிகளில், ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுக்கு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.