Vijay Latest News | தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க திமுக இடையூறு செய்யாது என அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை விட 10 இடங்கள் குறைவாகப் பெற்றுள்ள போதிலும், கடந்த 60 ஆண்டுகளாக நீடித்த திமுக - அதிமுக இடையிலான இருமுனை அரசியலை உடைத்து இக்கட்சி வரலாற்று சாதனை படைத்துள்ளது. தற்போது காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைப்பதற்கான முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள் மற்றும் அரசியல் நகர்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
24
ஆளுநருடன் விஜய் சந்திப்பு
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய், நேற்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். காங்கிரஸ் கட்சியின் 5 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதத்தை அவர் வழங்கிய போதிலும், பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை நிரூபிக்க கூடுதல் ஆதரவு தேவை என்பதால் ஆளுநர் இன்னும் இறுதி முடிவை அறிவிக்கவில்லை. இந்த அரசியல் நகர்வுகளால் தமிழகத்தில் புதிய ஆட்சி அமைப்பதற்கான சூழல் நிலவி வரும் வேளையில், அடுத்தகட்டமாக மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பெரும்பான்மையை உறுதிப்படுத்தும் முயற்சியில் விஜய் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
34
மௌனம் காக்கும் ஆளுநர்
ஆளுநர் அழைப்பு விடுக்காததால் விஜய் முதல்வராக பொறுப்பேற்கும் நிகழ்வு தள்ளிப்போகிறது. முன்னதாக இன்றைய தினம் பதவியேற்புக்கான நிகழ்வுகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ஆளுநரின் தொடர் மௌனத்தால் தவெக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனிடையே பரம எதிரிகளாக செயல்பட்டு வந்த திமுகவும், அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க இருப்பதாக தகவல் பரவி பெரும் அதிர்வலையை உருவாக்கியது. திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்கப் போவதாக செய்தி ஒன்று வைரலாகப் பரவியது.
இந்த நிலையில் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, “தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க திமுக இடையூறு செய்யாது. முதல் ஆறு மாதங்களுக்கு தவெகவின் நடவடிக்கைகளை அமைதியாக கண்காணிப்போம்.
பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்குவதாக தவெக தெரிவித்துள்ளது. ஆனால் தற்போது அதனை நடைமுறைப்படுத்துவது கடினம். ஆகையால் மாதம் ரூ.1000 வழங்குவதை தவெக தொடர வேண்டும். ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் வழங்குவதாக தவெக தெரிவித்துள்ளது. அதனையும் செயல்படுத்தினால் மகிழ்ச்சி தான். மேலும் காலை உணவு திட்டம் உள்ளிட்ட பயனுள்ள திட்டங்களை தவெக தொடரவேண்டுமென” குறிப்பிட்டுள்ளார்.