Ramzan Festival Holiday : விடுமுறை என்றாலே கொண்டாட்டம் தான், அந்த வகையில் வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையோடு சேர்த்து கூடுதல் விடுமுறை வந்தால் கேட்கவா வேண்டும் மக்களுக்கு சந்தோஷம் தான். அந்த வகையில் வருகிற மார்ச் 29,30, 31 மற்றும் ஏப்ரல் 1ஆம் தேதி என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கவுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் வெளியூர்களுக்கு பயணம் செல்ல திட்டமிட்டுள்ளனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் குளுமையான இடங்களுக்கு பயணம் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
தொடர் 4 நாட்கள் விடுமுறை
அதன் படி வருகிற மார்ச் 29,30 ஆகிய வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையை சேர்த்து மார்ச் 31ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை வரவுள்ளது.
இதனையடுத்து ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி வருட கணக்கு முடிவு நாளாகும் அன்றைய தினமும் அரசு விடுமுறை என்பதால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வரவுள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்து மற்றும் ரயில்கள் இயக்கப்படவுள்ளது.
சிறப்பு ரயில் அறிவிப்பு
இந்த நிலையில் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கும், கன்னியாகுமரியில் இருந்து தாம்பரத்திற்கும் ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு ரயிலானது இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரயில் வருகின்ற 28ஆம் தேதி மாலை 6 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்படுகிறது.
இதே போல கன்னியாகுமரியில் இருந்து மார்ச் 31ஆம் தேதி காலை 8. 55 மணிக்கு புறப்படுகிறது. இந்த சிறப்பு ரயிலில் 14 முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகள், இரண்டு பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலானது தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரியை சென்று சேருகிறது.
திருச்சிக்கு சிறப்பு ரயில்
இதே போல தாம்பரத்தில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கும், திருச்சிராப்பள்ளியில் இருந்து தாம்பரத்திற்கும் சிறப்பு ரயிலானது இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரயிலானது மார்ச் 29 மற்றும் 31ஆம் தேதியில் திருச்சிராப்பள்ளியில் இருந்து புறப்படுகிறது.
இதே போல தாம்பரத்திலிருந்து 29 ஆம் தேதியும் மார்ச் 31ஆம் தேதியும் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகள் இரண்டும், 10 இருக்கை வசதி கொண்ட பெட்டிகளும், 6 பொது பெட்டியும் இணைக்கப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருக்கு சிறப்பு ரயில்
இந்த சிறப்புரயிலானது திருச்சியில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம் வழியாக தாம்பரத்தை வந்தடைகிறது. இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை முதல் தொடங்க உள்ளது. இதே போல பெங்களூரில் இருந்து சென்னை சென்றதும் சென்ட்ரலில் இருந்து பெங்களூருக்கும் சிறப்பு ரயிலானது இயக்கப்பட உள்ளது.
இந்த ரயிலானது மார்ச் 28ஆம் தேதி பெங்களூரில் இருந்து புறப்பட்டு சென்னை வந்தடைகிறது அன்றைய தினமே சென்னையிலிருந்து புறப்பட்டு பெங்களூருக்கு சென்று சேருகிறது இந்த ரயில் பெங்களூர் ஜோலார்பேட்டை காட்பாடி பெரம்பலூர் வழியாக சென்னை சென்ட்ரலில் வந்தடைகிறது