Savukku Shankar: சவுக்கு சங்கருக்கு சர்க்கரை நோய், உயர் அழுத்தம், தமனியில் பிரச்னை உள்ளதால் தொடர் சிகிச்சை தரப்பட வேண்டும். பெரிய அளவிலான நோய் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர். இவர் சவுக்கு மீடியா என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அதில், ஆளும் திமுக அரசுக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். இந்நிலையில் சினிமா தயாரிப்பாளரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் ஆதம்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை போலீசாரால் கடந்த டிசம்பர் மாதம் 13ம் தேதி சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
25
காவல்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
இதையடுத்து, சவுக்கு சங்கருக்கு உடல்நிலையை காரணம் காட்டி ஜாமீனில் விடுவிக்கக் கோரி, அவரது தாய் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சவுக்கு சங்கருக்கு மார்ச் 25 வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில் மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் பெற்ற சவுக்கு சங்கர் ஜாமீன் நிபந்தனைகளை மீறி வீடியோக்களை பதிவிடுவதாகவும், விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. ஆகையால் அவரது ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
35
சவுக்கு சங்கருக்கு எச்சரிக்கை
இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன், ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது வழக்கில் தொடர்புடைய யாரையும் சந்திக்கக் கூடாது. சாட்சிகளை கலைக்க கூடாது. யாரைப் பற்றியும் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியிடக் கூடாது. இந்த நிபந்தனைகளை மீறிச் செயல்பட்டால் ஜாமீன் ரத்து செய்யப்படும் என சவுக்கு சங்கரை எச்சரித்திருந்தனர்.
மேலும், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தலைமையில் மருத்துவர்கள் குழு அமைத்து சவுக்கு சங்கருக்கு முழு உடல் பரிசோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சவுக்கு சங்கரின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் சவுக்கு சங்கருக்கு சர்க்கரை நோய், உயர் அழுத்தம், தமனியில் பிரச்னை உள்ளதால் தொடர் சிகிச்சை தரப்பட வேண்டும். பெரிய அளவிலான நோய் எதுவும் இல்லை என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
55
கைது செய்ய அனுமதி
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு அடைந்ததை அடுத்து நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் அமர்வு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. மருத்துவ சிகிச்சை மற்றும் ஜாமீன் கேட்டு சவுக்கு சங்கரின் தாய் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் இடைக்கால ஜாமீன் மார்ச் 25-ம் தேதியுடன் முடிகிறது. சரணடையாமல் சவுக்கு சங்கர் இருந்தால் அவரை காவல் துறை கைது செய்யலாமா? என கேட்டனர். இதனையடுத்து நீதிபதிகள் நள்ளிரவு 12 மணிக்கு மேல் உங்களின் கவுன்ட்டவுன் தொடர்கிறது. சரணடையாவிட்டால் சட்டப்படி நீங்கள் நடவடிக்கை எடுக்கலாம் என்றனர். நீதிமன்றம் அதற்கு எந்த தடையும் விதிக்கவில்லை. கைது செய்த பின் நீதிமன்றத்தை காவல் துறை அணுகலாம் என தெரிவித்தனர்.