தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 280 கி.மீ தொலைவிலும், புதுவைக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 320 கி.மீ தொலைவிலும், ஆந்திரப் பிரதேசம் நெல்லூருக்கு தென்கிழக்கே சுமார் 370 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணிநேரத்தில் 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. தொடர்ந்து மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை வட தமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுவைக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகே கரையை கடக்கக்கூடும்.
அப்போது சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் அதி கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதால் தான் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரைக்கு அருகே வரும் என்பதால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்படுவதாக தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இதனையடுத்து மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.
இதனையடுத்து ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டதை அடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். மழை நிவாரண முகாம்களாக உள்ள பள்ளிகள் மட்டும் இயங்காது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.