Sekar Babu Controversy : தெருக்கூத்தாடிகளா எங்கள் கலைஞர்கள்? கொந்தளித்த புஷ்பவனம் குப்புசாமி.. சேகர்பாபுவுக்கு அமைச்சர் ரமேஷ் கடும் பதிலடி!

Published : Nov 17, 2026, 03:50 PM IST

Sekar Babu Controversy: திருச்செந்தூர் சூரசம்ஹார விழா சர்ச்சையில் சேகர்பாபுவின் தெருக்கூத்தாடிகள் விமர்சனத்திற்கு புஷ்பவனம் குப்புசாமி ம்ற்றும் அமைச்சர் ரமேஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

PREV
14
சூரசம்ஹாரம் சர்ச்சை

கோயில் திருவிழாக்களில் ஒலிக்கும் நாட்டுப்புற இசையும், பக்திப் பாடல்களும் வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அல்ல. அவை தமிழர்களின் பாரம்பரியத்தோடும், ஆன்மிக உணர்வுகளோடும் இரண்டறக் கலந்தவை. தலைமுறை தலைமுறையாக கிராமியக் கலைகளை உயிர்ப்புடன் பாதுகாத்து வரும் கலைஞர்களுக்கு, அவர்களது கலைதான் அடையாளம்.

ஆனால், திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெற்ற சூரசம்ஹார விழாவில் பாடப்பட்ட பாடல் தற்போது மிகப்பெரிய அரசியல் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. முதல்வர் விஜய்யை முன்னிலைப்படுத்தி முருகப்பெருமானின் அரோகரா முழக்கம் எழுப்பப்பட்டதாக எழுந்த விமர்சனத்தைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு நிகழ்ச்சியை நடத்திய விதம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

குறிப்பாக, தெருக்கூத்துக் கலைஞர்களை அழைத்து வந்து ஆன்மிக நிகழ்ச்சி நடத்தினால் இப்படி தான் இருக்கும் என்று சேகர்பாபு பேசியுள்ளது நாட்டுப்புறக் கலைஞர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்குப் பதிலடி கொடுத்துள்ள பிரபல நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி, தனது தனிப்பட்ட மனக்காயத்தைத் தாண்டி ஒட்டுமொத்த கிராமிய இசைக் கலைஞர்களும் அவமதிக்கப்பட்டுள்ளதாகக் கொந்தளித்துள்ளார். இதற்கிடையே, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷும் சேகர்பாபுவின் கருத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அப்படி திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் என்ன நடந்தது? புஷ்பவனம் குப்புசாமி அளித்த விளக்கம் என்ன? சேகர்பாபுவின் விமர்சனத்திற்கு அமைச்சர் ரமேஷ் கூறிய பதில் என்ன? இந்தச் சர்ச்சையின் முழுப் பின்னணியைப் பார்க்கலாம்.

24
திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தில் நடந்தது என்ன?

சர்ச்சைக்கு என்ன காரணம்? 

திருச்செந்தூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சூரசம்ஹார விழா நவம்பர் 15, 2026 அன்று நடைபெற்றது

இந்த விழாவில் முருகப்பெருமானை போற்றும் வகையில் பக்திப் பாடல்கள் பாடப்பட்டன. அப்போது நிகழ்ச்சியின் நேரடி வர்ணனையாளர்கள் மற்றும் பாடல் குழுவினர், முதலில் 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' என முழக்கமிட்டதை தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் விஜய்க்கும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கும் அரோகரா என முழக்கமிட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.

முருகப்பெருமானுக்காக எழுப்பப்படும் பக்தி முழக்கத்தில் அரசியல் தலைவர்களின் பெயர்களும் இடம்பெற்றது ஏன்? கடவுளுடன் அரசியல் தலைவர்களை ஒப்பிடும் வகையில் பாடல்கள் அமைந்தனவா? என்ற கேள்விகள் எழுந்தன. இந்த நிகழ்வின் காணொளிகளும் சமூக வலைதளங்களில் பரவியதால் விவாதம் மேலும் தீவிரமடைந்தது

சேகர்பாபு கூறிய விமர்சனம் என்ன?

இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் ஆகம விதிகள் மீறப்பட்டதாகவும், விழா பக்தர்களுக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சியாக இல்லாமல் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிடுவதற்கான நிகழ்ச்சியாக மாறிவிட்டதாகவும் விமர்சித்தார்.

தெருக்கூத்தாடிகளை எல்லாம் அழைத்துச் சென்று முதல்வருக்கு அரோகரா, அறநிலையத்துறை அமைச்சருக்கு அரோகரா என்கிறார்கள். சூரசம்ஹார நிகழ்ச்சியில் வேல் பெறுதல் மற்றும் சூரசம்ஹாரம் செய்தல் போன்ற சடங்குகள் கோயில் அர்ச்சகர்கள் மற்றும் கோயிலைச் சேர்ந்தவர்களால் மேற்கொள்ளப்பட வேண்டியவை. ஆனால், அமைச்சர் வேல் மற்றும் சேவல் கொடியைக் கையில் வைத்திருந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

கடந்த ஆட்சியில் கோயில் நிகழ்ச்சிகளில் ஆகம விதிகள் பின்பற்றப்பட்டது. இறைவனின் புகழ் மட்டுமே பாடப்பட்டது. ஆனால் தவெக ஆட்சியில் ஆகம விதிகள் பின்பற்றப்படவில்லை என்றார்.

34
கலைஞர்களை அவமதிக்காதீர்கள்

புஷ்பவனம் குப்புசாமி கொந்தளிப்பு 

சேகர்பாபுவின் விமர்சனத்திற்கு புஷ்பவனம் குப்புசாமி கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் நிகழ்ச்சியில் பாடப்பட்ட பாடல் தொடர்பாக விளக்கமளித்து அவர் வெளியிட்ட வீடியோவில், தான் பாடிய பாடலில் எந்தத் தவறும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் அளித்த விளக்கத்தின் முக்கிய அம்சங்கள்

  • தான் பாடிய பாடலில் முதலமைச்சரை முருகப்பெருமானுடன் ஒப்பிட்டுப் புகழவில்லை.
  • பாடலின் பொருளைத் தவறாகப் புரிந்துகொண்டு விமர்சிப்பதாகக் கூறியுள்ளார்.
  • முருகப்பெருமானிடம் வேண்டிக்கொண்டால் வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்பதையே பாடியதாக விளக்கியுள்ளார்.
  • தன்னை விமர்சிப்பதற்காக ஒட்டுமொத்த கிராமிய இசைக் கலைஞர்களையும் இழிவுபடுத்த வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார்.


குறிப்பாக, சேகர்பாபுவின் தெருக்கூத்தாடிகள் என்ற விமர்சனம் தனது மனதை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த கிராமிய இசைக் கலைஞர்களின் மனதையும் புண்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

கடந்த திமுக ஆட்சிக் காலத்திலும் இதே கிராமிய இசைக் கலைஞர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பாடியுள்ளனர். அப்போது அவர்களது பாடல்களைக் கேட்டு ரசித்தவர்கள், தற்போது மட்டும் ஏன் தெருக்கூத்தாடிகள் என்று விமர்சிக்கிறார்கள் என புஷ்பவனம் குப்புசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

சிவபெருமானே கூத்தன் தான். அவரே ஆனந்த தாண்டவம் ஆடிய கூத்தன் தான். கூத்து என்றால் இழிவு இல்லை. கூத்து என்பது தமிழர்களின் பாரம்பரியக் கலை. அதை இழிவாகப் பேச வேண்டாம் என்றும், கோபத்தில்கூட கலைஞர்களைப் புண்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தன்னைப் பற்றிய பாடல் விமர்சனங்களைத் தனிப்பட்ட முறையில் தெரிவிக்கலாம்; ஆனால் ஒட்டுமொத்த கலைஞர்களையும் அவமதிக்க வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார்.

44
திமுகவின் பண்ணையார் மனநிலை

அமைச்சர் ரமேஷ் கண்டனம் 

கலைஞர்களை இழிவுபடுத்துவது கண்டனத்திற்குரியது

புஷ்பவனம் குப்புசாமி, வேல்முருகன், குழந்தை தியா உள்ளிட்ட கலைஞர்கள் திருச்செந்தூர் நிகழ்ச்சியில் பாடியுள்ளனர். அவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாகத் தெருக்கூத்தாடிகள் என்று விமர்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்துள்ளார்.

திமுகவின் மனநிலையே பண்ணையார் மனநிலைதான் என்றும், அந்த மனநிலையில் இருந்து கொண்டு கலைஞர்களைத் தெருக்கூத்தாடிகள் என்று விமர்சிப்பது எந்த வகையில் நியாயம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதே பாடகர்கள் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலும் பல்வேறு மேடைகளில் பாடியுள்ளனர். அப்போது அவர்கள் தெருக்கூத்தாடிகளாகத் தெரியவில்லையா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருச்செந்தூர் நிகழ்ச்சியில் முதலமைச்சருக்கு அரோகரா என்று முழக்கமிட்டது தொடர்பாகப் பாடகர்களிடம் விளக்கம் கேட்டதாகவும், அவர்களும் விளக்கம் அளித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் விஜய்யும் இதுபோன்ற புகழ்பாடுதல்களை விரும்புவதில்லை என்று பாடகர்களிடம் ஏற்கெனவே தெரிவித்ததாகக் கூறியுள்ளார்.

இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் கவனமாகச் செயல்பட வேண்டும் என்று பாடகர்களிடம் அறிவுறுத்தியதாகவும், மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories