Pongal Gift
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஜனவரி 14 தை பொங்கல், ஜனவரி 15 திருவள்ளுவர் தினம், ஜனவரி 16 உழவர் திருநாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அதில், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ரூ.1000 ரொக்கம் வழங்கப்பட்டு வந்தது. அதன்படி இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.
Tamil Nadu government
அதில் 2025-ம் ஆண்டு தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 2,20,94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள். இதனால் அரசுக்கு ரூபாய் 249.76 கோடி செலவு ஏற்படும்.
Pongal Gift
மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இவற்றையும் சேர்த்து வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான டோக்கன்கள் டிசம்பர் 9ம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வீடுகளுக்கு சென்று வழங்கப்படும் என்றும் அதில் பரிசுத் தொகுப்பு பெற வேண்டிய நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
Pongal Prize Announcement
பொங்கல் பரிசு தொகுப்பில் பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்த்த ரூ.1000 இடம் பெறவில்லை. எனவே இந்தாண்டு 1000 ரூபாய் பரிசு தொகுப்பு இல்லையா? அல்லது பின்னர் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருப்பதால் எந்த நேரத்தில் ரூ.1000 தொடர்பான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் இருந்து வருகின்றனர். பொங்கலுக்கு ரூ.1000 வழங்கவில்லை என்றால் எதிர்க்கட்சிகள் தேவையில்லாத அரசியல் செய்வார்கள் என்பதால் கண்டிப்பாக வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.