லஞ்ச வழக்கில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நாகை கிராம நிர்வாக அலுவலர் ராஜாராமன், சாலையோரத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். போலீசார் நடத்திய விசாரணையில், போதையில் இருந்த அவரை இரண்டு திருநங்கைகள் கல்லால் தாக்கிக் கொலை செய்தது அம்பலமானது.
நாகை மாவட்டம் வாழக்கரை பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராமன் (38). கிராம நிர்வாக அலுவராக பணியாற்றி வந்த இவர் கடந்த 2024ம் ஆண்டு பட்டா மாறுதலுக்காக லஞ்சம் பெற்றதை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் வசமாக சிக்கினார். இதனையடுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் கடந்த 7ம் தேதி வழக்கு விசாரணைக்காக நாகை நீதிமன்றத்தில் ஆஜாராகியுள்ளார். பின்னர் அங்கிருந்து மாலை இருசக்கர வாகனத்தில் வாழைக்கரையில் உள்ள வீட்டுக்கு புறப்பட்டார். ஆனால் இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ராஜாராமனை பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
24
கிராம நிர்வாக அலுவலர் கைது
இந்நிலையில் நேற்று காலை நாகப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை செல்லூர் அருகே சாலையோரத்தில் தலையில் ரத்த காயங்களுடன் ராஜாராமன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராஜாராமன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
34
தனிப்படை அமைத்து தீவிர விசாரணை
இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த ராஜாராமனின் அருகில் ரத்தக்கறை படிந்த பெரிய கல் கிடந்தது. இதனால் ராஜாராமன் கல்லால் தலையில் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகித்தனர். மேலும் கிராம நிர்வாக அலுவலர் ராஜாராமனை கொலை செய்தது யார்? இந்த கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையில், ராஜாராமன் மரணத்திற்கு இரண்டு திருநங்கைகள் காரணம் என போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. அன்று இரவு ராஜாராமன் அந்த பகுதியில் போதையில் படுத்திருந்த போது அங்கு வந்த செல்லுரைச் சேர்ந்த நிவேதா, ஶ்ரீகவி ஆகிய இரண்டு திருநங்கைகள் அவர் முகத்தில் கருங்கல்லை தூக்கி போட்டு கொலை செய்துவிட்டு அவரிடமிருந்த பணம், செல்போன், மோதிரம் ஆகியவற்றை பறித்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.