
இந்தியா டுடே, சிவோட்டர்ஸ் கருத்துக் கணிப்பு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அந்த கருத்து கணிப்பில், “தமிழகத்தில் தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றாலும் திமுக கூட்டணி 45 சதவீத வாக்குகளை பெற்று முதல் இடம் பிடிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக நகராட்சி நிர்வாகங்கள் துறை அமைச்சர் நேரு கருத்து தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் குறித்து நிகழ்த்தப்படும் ஒவ்வொரு ஆய்வும், கருத்துக் கணிப்புகளும் திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் நிறுவ மக்கள் உறுதியெடுத்துவிட்டதை காட்டுகின்றன. நேற்று டெக்கான் க்ரானிகல் பத்திரிகை எழுதியிருந்த ஆய்வு கட்டுரையும், இந்தியா டுடே வெளியிட்ட கருத்துக் கணிப்பும் அதனை மெய்பிக்கின்றன. “பெண்களின் இதயங்களை வெல்லும் போட்டியில், திமுக முன்னணியில் உள்ளது” (In race to win hearts of women, DMK is ahead a) என தலைப்பிட்டு டெக்கான் க்ரானிகல் கட்டுரை வெளியிட்டிருக்கிறது. அதில், சிறுபான்மையினர் மத்தியில் அதிமுகவின் அங்கீகாரம் சரிந்துள்ளது என்றும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 70 முதல் 80 சதவீத சிறுபான்மையினர் வாக்குகளைப் பெற்று கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் என்று சமூகவியலாளர்கள் கருதுகின்றனர் என தெரிவித்திருக்கிறார்கள்.
இந்தியா டுடே பத்திரிகையும் சி வோட்டர்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியிருக்கிறது. திமுகவின் கூட்டணிக் கட்சிகள் இடம்பெற்றிருக்கும் இந்தியா கூட்டணி 45 சதவிகித ஆதரவோடு முன்னிலையில் இருக்கிறது என இந்தியா டுடே - சி வோட்டர்ஸ் தெரிவித்திருக்கிறது. அதிமுக இடம்பெற்றிருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 33 சதவிகித ஆதரவுதான் இருக்கிறது. வித்தியாசம் 12% என்பதால் தொட முடியாத உயரத்தில் திமுக கூட்டணியை மக்கள் உயர்த்திப்பிடிக்கின்றனர்.
மாண்புமிகு முதலமைச்சரின் தலைமையில் 2019 நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி தொடர்ச்சியாக எல்லா தேர்தல்களிலும் வெற்றி பெறும் கூட்டணியாக திமுக அணி இருக்கிறது. 2026 தேர்தலிலும் திமுக வெல்லும். அதனை கருத்துக் கணிப்புகளும் உறுதி செய்கின்றன.
தமிழ்நாட்டு மக்களின் குறிப்பாக பெண்களின் நம்பிக்கையையும் பேராதரவையும் பெற்று அசைக்க முடியாத அரசாக விளங்குகிறது திராவிட மாடல் அரசு! திராவிட மாடல் 2.0 மீண்டும் அமைக்க தமிழ்நாட்டின் பெரும்பான்மை பெண்கள் முடிவெடுத்து விட்டார்கள்! தமிழ்நாட்டில் இருக்கும் மூன்று கோடிக்கும் மேற்பட்ட பெண்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் பெற்று 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அடையப் போகும் வரலாற்று வெற்றியில் பெண்களுக்கு முக்கிய பங்கு இருக்கும்.
தமிழ்நாட்டுப் பெண்களின் உரிமைகளுக்காக அவர்களின் சமூக மேம்பாட்டிற்காக திராவிட மாடல் அரசு அக்கறையோடு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தில் ஏறக்குறைய 1.30 கோடி குடும்பத் தலைவிகள் பயன்பெற்று வருகின்றனர். அரசு நகர பேருந்துகளில் அனைத்துப் பெண்களுக்கும் ‘விடியல் பயணம்’ மூலம் உத்வேகத்தையும் பொருளாதார சேமிப்பையும் உறுதிப்படுத்தியிருப்பவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். இதுவரை 800 கோடி பயணங்களுக்கும் மேல் பெண்களால் மேற்கொள்ளப்பட்டிருப்பதே இத்திட்டத்தை தமிழ்நாட்டுப் பெண்கள் எவ்வளவு தூரம் வரவேற்றிருக்கிறார்கள் என்பதற்குச் சான்று.
பெண்களின் முன்னேற்றத்திற்கான தடைகள் எங்கிருந்தாலும் அதை ஒழித்து, அவர்களது முன்னேற்றப்பாதையைச் செழுமைப்படுத்துவதற்காகப் பல்வேறு திட்டங்களைத் திராவிட மாடல் அரசு தீட்டியிருக்கிறது. புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் பெண்கள் கல்வி கற்க பொருளாதாரம் ஒரு தடையாக இருக்க முடியாது என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறது. இத்திட்டம் மூலம் இதுவரை 6.95 இலட்சம் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாயை வழங்கி வருகிறது தமிழ்நாடு அரசு.
பெண்களின் திறன்களும் உழைப்பாற்றலும் படைப்பாற்றலும் கிராமங்களில் முடங்கிவிடக் கூடாது அவர்கள் நகரங்களுக்கு வந்து, தங்களையும் உயர்த்தி தமிழ்நாட்டையும் உயர்த்த வேண்டும் எனும் நோக்கத்தோடு அதீத பாதுகாப்போடு உயர்தர தோழி விடுதிகளை அமைத்திருக்கிறது.
பெண்களை முன்னேற்று திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடுதான் இருக்கிறது. இது போன்றத் திட்டங்கள் பெண்கள் வாழ்வில் ஏற்படுத்திவரும் மறுமலர்ச்சியை கண்டு வயிற்றெரிச்சலில் திரிபவர்கள், உண்மைகளை ஜீரணிக்க முடியாமல், அவதூறுகளை நாள்தோறும் அள்ளிவிட்டுக் கொண்டிருக்கிருக்கிறார்கள்.
இதனையெல்லாம் தமிழ்நாட்டுப் பெண்கள் பொருட்படுத்துவதில்லை. தங்களுக்காக உழைக்கின்ற, தங்களுக்காக திட்டங்களை உள்ளன்போடு, உயர்த்தும் நோக்கத்தோடு செயல்படுத்தும் திராவிட மாடல் அரசே தொடர வேண்டும் எனும் தமிழ்நாட்டின் பெரும்பான்மை பெண்கள் முடிவெடுத்து விட்டார்கள்.
45% என்பதே கூட மிகக் குறைவான கணக்குதான் என்பதை 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அடையப் போகும் வரலாற்று வெற்றி நிரூபிக்கும். அதற்கு திமுக ஆட்சியில் பயன்பெறும் பெண்கள்தான் மகுடம் சூட்டுவார்கள்!