மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளையில் திடீர் ட்விஸ்ட்: இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி உள்ளிட்ட 2 பேர் கைது; 5 கிலோ நகை பறிமுதல்!

Published : Nov 14, 2026, 05:15 PM IST

மதுரை தனிஷ்க் நகைக்கடையில் ரூ.20 கோடி தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பம்! யூடியூப் பிரபலம் நிஷாந்த் தலைமறைவான நிலையில், அவரது தந்தை சுரேஷ் மற்றும் இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சி கைது செய்யப்பட்டு 5 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது.

PREV
14
மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளையில் முக்கியத் திருப்பம்

மதுரை பழங்காநத்தம் புறவழிச் சாலையில் புதிதாகத் திறக்கப்பட்ட தனிஷ்க் நகைக்கடையில் ரூ.20 கோடி மதிப்பிலான 15 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், முக்கியக் குற்றவாளியின் தந்தை மற்றும் இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சி ஆகிய இருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

24
சம்பவத்தின் பின்னணி துப்பு துலங்கியது எப்படி?

மதுரை பழங்காநத்தம் பைபாஸ் சாலையில் (நேரு நகர், நேதாஜி பிரதான சாலை) அமைந்துள்ள தனிஷ்க் நகைக்கடை கடந்த அக்.14-ம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை சுமார் 3 மணியளவில் மர்ம நபர் ஒருவர் கடையில் மின்தூக்கிக்காக (Lift) அமைக்கப்பட்டிருந்த துவாரம் வழியாக உள்ளே புகுந்து, சுமார் ரூ.20 கோடி மதிப்பிலான 15 கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றார். காலை கடையைத் திறந்த ஊழியர்கள் நகைகள் திருடுபோனதைக் கண்டு எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபரைப் பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. கடையின் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, முகமூடி அணிந்த நபர் ஒருவர் கடையில் புகுந்து திருடியது பதிவாகியிருந்தது. மேலும், கடந்த நவ.5-ம் தேதி அதிகாலையிலேயே அவர் முகமூடி அணிந்து வந்து, கொள்ளையடிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து நோட்டமிட்டுச் சென்றதும் தெரியவந்தது.

கொள்ளையடிப்பதற்கு முன்னதாகவே அந்த நபர் 2 முறை வாடிக்கையாளர் போலக் கடைக்கு வந்து சென்றுள்ளார். சிசிடிவி காட்சிகளைப் பார்த்த நகைக்கடை ஊழியர் ஒருவர் அவரைச் சரியாக அடையாளம் காட்டினார். இதன் அடிப்படையில், அந்த நபர் யூடியூபில் பிரபலமாக இருக்கும் நிஷாந்த் என்பது உறுதியானது.

34
தந்தை மற்றும் இன்ஸ்டாகிராம் பிரபலம் கைது

கொள்ளைச் சம்பவத்திற்குப் பிறகு, நிஷாந்த் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு பேசியவர்களின் விவரங்களைப் போலீசார் ஆய்வு செய்தனர். இதில், நிஷாந்த்துக்கு உடந்தையாக இருந்ததாக அவரது தந்தை சுரேஷ் மற்றும் இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சி ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைதானவர்களிடமிருந்து சுமார் 4.5 முதல் 5 கிலோ வரையிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

44
ரயிலில் தப்பிய நிஷாந்த் – தனிப்படை தீவிர வேட்டை

நகைக்கடைக்கு ஸ்கூட்டியில் வந்து கொள்ளையடித்த நிஷாந்த், சம்பவத்திற்குப் பிறகு ஸ்கூட்டியை வேறு இடத்தில் நிறுத்திவிட்டு ரயில் மூலம் தப்பிச் சென்றுள்ளார். இதனையடுத்து, அதிகாலை நேரங்களில் மதுரையிலிருந்து புறப்படும் ரயில்கள் மற்றும் அவை செல்லும் வழித் தடங்களைக் கண்காணித்து, பல்வேறு மாநிலங்களுக்கும் பகுதிகளுக்கும் தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். தலைமறைவாக உள்ள நிஷாந்த்தைப் பிடிக்கத் தனிப்படைகள் தீவிரம் காட்டி வரும் நிலையில், அவர் கைதானால் இந்தக் கொள்ளையில் தொடர்புடைய மேலும் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories