
ரயிலில் நீண்ட தூரப் பயணம் செய்யும்போது ஜன்னலோர இருக்கை, வசதியான படுக்கை எனப் பயணத்தை ரசிக்க வேண்டும் என்பதுதான் பலருடைய விருப்பம். ஆனால், டிக்கெட் முன்பதிவு செய்யும்போது Confirmed டிக்கெட் கிடைக்காமல் RAC கிடைத்துவிட்டால், பயணத்தின் மகிழ்ச்சியே சற்றுக் குறைந்துவிடும். குறிப்பாக, இரவு நேரத்தில் ஒரே படுக்கையை இரண்டு பேர் பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலை பல பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது.
அதிலும், ஒரு முழு டிக்கெட்டுக்கான கட்டணத்தைச் செலுத்திவிட்டு, பாதி படுக்கை வசதியை மட்டுமே பெறுவது நியாயமா என்ற கேள்வியும் நீண்டகாலமாக எழுந்து வருகிறது. இந்தச் சூழலில், ரயில் பயணிகளுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், பல ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் RAC (Reservation Against Cancellation) டிக்கெட் முறையையே நீக்குவது குறித்து இந்திய ரயில்வே நிர்வாகம் ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
RAC முறையைத் தொடர வேண்டுமா? பயணிகளிடம் முழுக் கட்டணம் வசூலித்துவிட்டு, பகுதி படுக்கை வசதியை வழங்குவது சரியானதா? நாடாளுமன்றக் குழு முன்வைத்த பரிந்துரை என்ன? இந்த மாற்றம் அமலுக்கு வந்தால் ரயில் பயணிகளுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? விரிவாகப் பார்க்கலாம்.
RAC என்பதன் விரிவாக்கம் Reservation Against Cancellation. அதாவது, ஏற்கெனவே முன்பதிவு செய்த பயணிகள் தங்களுடைய டிக்கெட்டுகளை ரத்து செய்யும்போது காலியாகும் படுக்கை வசதியைப் பயன்படுத்தி, காத்திருப்புப் பட்டியலில் இருக்கும் பயணிகளுக்கு இடமளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ஒரு முன்பதிவு முறைதான் RAC.
ரயில் டிக்கெட் முன்பதிவில் கன்பார்ம் டிக்கெட் (Confirmed) ஆர்.ஏ.சி (RAC), காத்திருப்புப் பட்டியல் ( Waiting List) எனப் பல்வேறு நிலைகள் உள்ளன.
கன்பார்ம் டிக்கெட்: பயணிக்கு தனிப்பட்ட இருக்கை மற்றும் படுக்கை வசதி உறுதி செய்யப்படும்.
ஆர்.ஏ.சி டிக்கெட் : பயணம் செய்ய அனுமதி உண்டு. ஆனால், தனிப்பட்ட முழு படுக்கை வசதி கிடைக்காது. பொதுவாக ஒரு சைடு லோயர் பெர்த் இரண்டு RAC பயணிகளுக்குப் பகிர்ந்து வழங்கப்படும்.
காத்திருப்புப் பட்டியல்: காத்திருப்புப் பட்டியலில் இருக்கும் டிக்கெட். உறுதிப்படுத்தப்படாத டிக்கெட்டுக்கு RAC அல்லது Confirmed நிலை கிடைக்க வேண்டும்.
ஆர்.ஏ.சி டிக்கெட் வைத்திருப்பவர்கள் ரயிலில் பயணம் செய்யலாம். ஆனால், அவர்களுக்கு முழுமையான படுக்கை வசதி கிடைப்பது உறுதியல்ல.
ஆர்.ஏ.சி டிக்கெட்டில் இருக்கும் முக்கியமான பிரச்சினையே இதுதான். உதாரணமாக, ஒரு ரயிலில் சைடு லோயர் பெர்த் காலியாக இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்தப் படுக்கை இரண்டு ஆர்.ஏ.சி பயணிகளுக்குப் பகிர்ந்து வழங்கப்படும்.
இதில் பகல் நேரத்தில் இரண்டு பயணிகளும் அமர்ந்து பயணம் செய்யும் வகையில் வசதி இருக்கும். இரவு நேரத்தில் அதே படுக்கையை இருவரும் பகிர்ந்து படுத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.
இதனால் நீண்ட தூரப் பயணங்களில் பயணிகளுக்குப் போதிய தூக்கம் கிடைக்காமல் போகலாம். குறிப்பாக, வயதானவர்கள், குழந்தைகளுடன் பயணம் செய்பவர்கள் மற்றும் இரவு முழுவதும் பயணம் செய்ய வேண்டியவர்கள் அதிக சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
முழுக் கட்டணம் செலுத்தியும் முழு படுக்கை கிடைப்பதில்லை
ஆர்.ஏ.சி டிக்கெட் வைத்திருக்கும் பயணிகளிடமும் முழுமையான டிக்கெட் கட்டணமே வசூலிக்கப்படுகிறது. ஆனால், அவர்களுக்குத் தனிப்பட்ட முழு படுக்கை வசதி கிடைப்பதில்லை. ஒரு பயணி முழுக் கட்டணம் செலுத்திய பிறகும் பாதி படுக்கையை மட்டுமே பயன்படுத்த வேண்டியிருப்பது நியாயமற்றது என்ற கருத்து எழுந்துள்ளது.
ஆண், பெண் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியம்
சில நேரங்களில் ஒரே சைடு லோயர் பெர்த்தில் ஆண் மற்றும் பெண் பயணிகள் இருவருக்கும் ஆர்.ஏ.சி ஒதுக்கீடு செய்யப்படலாம். இதுபோன்ற சூழலில் இருவரும் ஒரே படுக்கையைப் பகிர்ந்து கொள்வது அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக, தனிப்பட்ட இடவசதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான கவலைகளும் எழுகின்றன.
இத்தகைய சூழல்களில் பயணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப மாற்றுப் படுக்கை வசதிகளை ஏற்பாடு செய்வது ரயில் டிக்கெட் பரிசோதகர்களுக்கும் (TTE) சவாலாக உள்ளது.
ரயிலில் காலியாகப் படுக்கைகள் இல்லாதபோது மாற்று ஏற்பாடு செய்வது கடினமாகிவிடுகிறது. இந்தக் காரணங்களால் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் ஆர்.ஏ.சி முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
2026 பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ஆர்.ஏ.சி டிக்கெட் வைத்திருக்கும் பயணிகளிடம் முழுக் கட்டணம் வசூலிப்பது நியாயமானதல்ல என்று நாடாளுமன்றக் குழு சுட்டிக்காட்டியது.
குறிப்பாக, ரயில் பயணத்திற்கான சார்ட் தயாரிக்கப்பட்ட பிறகும் ஆர்.ஏ.சி நிலையிலேயே இருக்கும் பயணிகளுக்கு முழுமையான படுக்கை வசதி கிடைக்கவில்லை என்றால், அவர்களிடம் முழுக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று பரிந்துரைத்தது.
மேலும், முழுக் கட்டணம் செலுத்தியும் தனிப்பட்ட பெர்த் கிடைக்காத பயணிகளுக்கு, கட்டணத்தின் ஒரு பகுதியைத் திருப்பி வழங்குவதற்கான நடைமுறையை உருவாக்க வேண்டும் என்றும் ரயில்வே அமைச்சகத்திடம் வலியுறுத்தியது.
அதாவது, RAC டிக்கெட்டில் பயணம் செய்யும் பயணிகளுக்கு முழுப் படுக்கை கிடைக்கவில்லை என்றால், அதற்கேற்ப கட்டணத்திலும் சலுகை வழங்க வேண்டும் என்பதே இந்தப் பரிந்துரையின் முக்கிய நோக்கம்.
ரயில்வே நிர்வாகம் ஆர்.ஏ.சி முறையை நீக்குவது குறித்து பரிசீலித்து வருவதால், இந்த மாற்றம் அமலுக்கு வந்தால் பயணிகளுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
ஆர்.ஏ.சி டிக்கெட் முறையை நீக்குவது குறித்து இந்திய ரயில்வே நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. ஆனால், RAC முறையை முழுமையாக நீக்குவதற்கான அதிகாரப்பூர்வ இறுதி அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. அதேபோல், இந்த நடைமுறை எப்போது முதல் அமலுக்கு வரும் என்பதற்கான தேதியும் அறிவிக்கப்படவில்லை.