
ஒரு நகைக்கடை.. பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள்.. கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த கட்டிடத்தைப் பயன்படுத்தி அரங்கேற்றப்பட்ட துணிகரக் கொள்ளை. தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்திய மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளைச் சம்பவத்தில், கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து நகைகளும் தற்போது மீட்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்தின் முக்கியக் குற்றவாளி உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால், இத்தனை பாதுகாப்பு அம்சங்கள் இருந்தும் கொள்ளை நடந்தது எப்படி? நகைக்கடையின் அலாரம் ஏன் ஒலிக்கவில்லை? கொள்ளையன் யார்? தலைமறைவாக இருந்த அவரை போலீசார் எப்படிப் பிடித்தனர்? கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் எங்கே பதுக்கி வைக்கப்பட்டிருந்தன?
இந்தக் கேள்விகளுக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு முக்கியத் தகவல்களை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, நகைக்கடையின் பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்தும் அவர் தெரிவித்துள்ள தகவல்கள் கவனம் பெற்றுள்ளன.
மதுரை பைபாஸ் சாலையில் உள்ள நேரு நகர் பகுதியில் புதிதாகத் திறக்கப்பட்ட தனிஷ்க் நகைக்கடையில் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது.
நகைக்கடை திறக்கப்பட்ட நாள்: அக்டோபர் 15, 2026.
கொள்ளை நடைபெற்றதாகக் கூறப்படும் நாள்: நவம்பர் 11-ம் தேதி நள்ளிரவு.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் எடை: 11.384 கிலோ.
நகைகளின் மதிப்பு: சுமார் ரூ.15 கோடி
நவம்பர் 12-ஆம் தேதி காலை ஊழியர்கள் கடையைத் திறக்க வந்தபோது, முதல் தளத்தில் இருந்த நகைக் காட்சிப் பெட்டிகள் உடைக்கப்பட்டிருந்ததையும், நகைகள் காணாமல் போயிருந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்
உடனடியாகக் கடை நிர்வாகத்திற்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
கொள்ளையடித்தது எப்படி? கட்டிடத்தின் எந்தப் பகுதியைப் பயன்படுத்தினார்?
இந்தச் சம்பவத்தில் மிகவும் அதிர்ச்சியளிக்கும் விஷயம், கட்டிடத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த கட்டுமானப் பணிகளை நிஷாந்த் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டதுதான். கட்டிடத்தின் பின்புறம் அமைக்கப்பட்டிருந்த கட்டுமான சாரக்கட்டுகளைப் பயன்படுத்தி மேலே சென்றுள்ளார்.
அங்கிருந்து முழுமையடையாத லிப்ட் ஷாஃப்ட் வழியாகக் கீழே இறங்கியுள்ளார். நகைக்கடையின் முதல் தளத்திற்குச் சென்று அங்கிருந்த தங்கம் மற்றும் வைர நகைகளை எடுத்துக் கொண்டு வெளியேறியுள்ளார்.
கட்டிடத்தின் வழக்கமான நுழைவுவாயில் வழியாக வராமல், கட்டுமானப் பணிகள் நடைபெற்ற பகுதியில் இருந்த வழியைப் பயன்படுத்தியதால் இந்தக் கொள்ளை நடந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மதுரை காவல் ஆணையர் ராஜேந்திரன் மேற்பார்வையில், காவல் துணை ஆணையர் ஏ.ஜி. இனிகோ திவ்யன் தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இதில், நகைக்கடையின் உள்ளேயும் வெளியேயும் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். கொள்ளையனின் உடல் அடையாளங்கள் மற்றும் கையில் இருந்த டாட்டூ உள்ளிட்ட அடையாளங்களைக் கவனித்தனர்.
கொள்ளையடித்தது யார்? முக்கியக் குற்றவாளி யார்?
இந்தக் கொள்ளை வழக்கின் முக்கியக் குற்றவாளி சமூக வலைதள பிரபலமான யூடியூபர் எஸ். நிஷாந்த் என அடையாளம் காணப்பட்டது. நகைக்கடையில் கொள்ளையடிப்பதற்கு முன்பாகப் பலமுறை அந்தக் கடைக்குச் சென்று அதன் அமைப்பைக் கவனித்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொள்ளையில் அவருக்கு உதவியதாகக் கூறப்படும் இரண்டு பேர்
நிஷாந்தின் தோழியான இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் மீனாட்சி மற்றும் நிஷாந்தின் தந்தை சுரேஷ். கொள்ளைக்குப் பிறகு நிஷாந்த் தப்பிச் செல்லவும், நகைகளை மறைத்து வைக்கவும் இருவரும் உதவியதாகக் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
மீனாட்சி மற்றும் நிஷாந்தின் தந்தை எப்படி சிக்கினர்?
நிஷாந்த் தலைமறைவான நிலையில், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அப்போது மீனாட்சியின் தொலைபேசி உரையாடல்கள் மற்றும் தொடர்புகள் போலீசாருக்கு முக்கியத் துப்பாக அமைந்ததாக காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
விசாரணையின் அடிப்படையில் நிஷாந்தின் தந்தை சுரேஷ் மற்றும் தோழி மீனாட்சி ஆகியோர் முதலில் கைது செய்யப்பட்டனர். இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி முதற்கட்டமாக மாடக்குளம் கண்மாய் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 5.5 கிலோ நகைகளை மீட்டனர்.
நிஷாந்த் பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற தனியார் சொகுசுப் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு நிஷாந்தின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் தர்மபுரி மாவட்ட காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் அதியமான்கோட்டை போலீசார் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சேஷம்பட்டி பைபாஸ் பகுதியில் பேருந்தை நிறுத்தினர். போலீசார் பேருந்தில் சோதனை மேற்கொண்டபோது நிஷாந்த் தப்பிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
பேருந்தின் ஜன்னல் வழியாகக் குதித்துத் தப்பிக்க முயன்றார். போலீசார் அவரைச் சுற்றி வளைத்தனர். பின்னர் மதுரை மாநகர தனிப்படை போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மதுரைக்கு அழைத்து வரப்பட்ட நிஷாந்திடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து நிஷாந்த் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்ட்டு, அவரை டிசம்பர் 1 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரது தந்தை சுரேஷ் மற்றும் தோழி மீனாட்சி ஆகியோரும் நீதிமன்றக் காவலில் உள்ளனர்.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் எங்கே மீட்கப்பட்டன?
இந்த வழக்கில் வெவ்வேறு இடங்களில் நகைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. நிஷாந்திடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், மதுரை விளாச்சேரி பகுதியில் பதுக்கி வைத்திருந்த எஞ்சிய நகைகளை போலீசார் கைப்பாற்றினர்.
கடை மூடப்பட்டிருக்கும் நேரத்தில் நகைகளை யாராவது தொட்டால் எச்சரிக்கை ஒலி எழுப்பும் வகையில் Burglar Alarm வசதி இருந்துள்ளது. ஆனால், சம்பவத்தின்போது அந்த அலாரம் ஸ்விட்ச் ஆன் செய்யப்படவில்லை என ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தனிஷ்க் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட மொத்தம் தங்கம் மற்றும் வைர நகைகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.