
தமிழக அரசியலில் திமுகவின் அடுத்தகட்ட நகர்வு என்ன? பாஜகவுடன் திமுக கூட்டணி அமைக்கப் போகிறதா? காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகியதற்குப் பிறகு திமுக எடுக்கப்போகும் அரசியல் முடிவு என்ன? எனப் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், டெல்லியில் நடைபெற்ற ஒரு சந்திப்பு தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி உள்ளிட்ட திமுக எம்.பி.க்கள் சந்தித்துப் பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது. அதிலும், இதுவரை தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மத்திய அரசின் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த திமுக, தற்போது அந்த மசோதாவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அமித் ஷா - கனிமொழி சந்திப்பின் பின்னணி என்ன? தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக திடீரென ஆதரவு அளிக்க என்ன காரணம்? தமிழகத்திற்கு 59 மக்களவைத் தொகுதிகள் கிடைக்குமா? பாஜகவுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு கனிமொழி கூறியது என்ன? விரிவாகப் பார்க்கலாம்.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வரும் 30 ஆம் தேதி தொடங்கவுள்ளது. அந்த கூட்டத்தொடரில் திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய பாஜக அரசு கொண்டு வரவுள்ளது. இந்நிலையில், இந்த மசோதாவுக்கு திமுக ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது .
முன்னதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டது.
இந்த முடிவை தொடர்ந்து, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்தனர். இந்தச் சந்திப்பில் கனிமொழி, டி.ஆர். பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன் உள்ளிட்ட திமுக எம்.பி.க்கள் பங்கேற்றனர்.
இந்தச் சந்திப்புக்கான முக்கியக் காரணம், நாடாளுமன்றத்தில் மீண்டும் கொண்டுவரப்பட உள்ள தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக திமுக எடுத்துள்ள முடிவை மத்திய உள்துறை அமைச்சரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஏன் ஆதரவு?
தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக ஆரம்பம் முதலே சில முக்கியமான எதிர்ப்புகளையும், கோரிக்கைகளையும் முன்வைத்து வந்தது.
குறிப்பாக, 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை பாதிக்கப்படலாம் என்று திமுக வலியுறுத்தியது.
கனிமொழி தெரிவித்த முக்கியக் கருத்துகள்
முந்தைய மசோதாவில் 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அனைத்து மாநிலங்களுக்கும் 50 சதவீதம் தொகுதிகள் அதிகரிக்கப்படும் என்ற உறுதி மசோதாவில் எழுத்துப்பூர்வமாக இடம்பெறவில்லை.
2011 கணக்கெடுப்பின் அடிப்படையில், 50 சதவீத உயர்வின்றி தொகுதி மறுவரையறை செய்யப்பட்டிருந்தால் தமிழகத்தின் மக்களவைத் தொகுதிகள் 39 ல் இருந்து 32 ஆகக் குறைய வாய்ப்பிருந்திருக்கும். 50 சதவீத உயர்வு வழங்கப்பட்டாலும் தமிழகத்திற்கு 48 தொகுதிகளே கிடைத்திருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
தற்போது 1971 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் அனைத்து மாநிலங்களுக்கும் 50 சதவீத தொகுதி உயர்வு வழங்க வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இதன் காரணமாகவே தற்போது தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளதாக கனிமொழி தெரிவித்தார்.
பாஜகவுடன் கூட்டணியா? கனிமொழி பதிலடி
அமித் ஷாவைச் சந்தித்தது மட்டுமின்றி, தொகுதி மறுவரையறை மசோதாவுக்கும் திமுக ஆதரவு தெரிவித்திருப்பதால் திமுக - பாஜக இடையே புதிய அரசியல் கூட்டணி உருவாகிறதா என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து செய்தியாளர்கள் கனிமொழியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறிய கருத்து அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
காங்கிரஸ் பாஜகவுடன் கூட்டணியில் இருந்ததா?
ஒரு கட்சி கொண்டுவரும் மசோதாவை மற்றொரு கட்சி ஆதரிப்பதால் மட்டும் இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி உருவாகிவிடாது. பாஜக அரசு கொண்டுவந்த மசோதாவை ஆதரிப்பது கூட்டணி என்றால், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான இடஒதுக்கீடு மசோதாவை ஆதரித்த காங்கிரஸ் கட்சியும் பாஜகவுடன் கூட்டணியில் இருந்ததா?
EWS இடஒதுக்கீடு மசோதாவை திமுக எதிர்த்தது. ஆனால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகள் அந்த மசோதாவை ஆதரித்தன. அப்படியென்றால் அந்தக் கட்சிகள் அனைத்தும் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தனவா? என்று கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் ஒரு குறிப்பிட்ட மசோதாவுக்கு ஆதரவு தெரிவிப்பதையும், தேர்தல் அரசியலில் கூட்டணி அமைப்பதையும் ஒன்றாகப் பார்க்கக் கூடாது என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.
EWS இடஒதுக்கீடு மசோதா என்றால் என்ன?
EWS இடஒதுக்கீடு என்பது பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடாகும். 2019 ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசு கொண்டுவந்த 103-வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் இந்த இடஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் முக்கிய அம்சங்கள்
நவம்பர் 30 முதல் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர்
இந்த விவகாரத்தின் அடுத்தகட்ட நகர்வாக நவம்பர் 30 முதல் டிசம்பர் 3 வரை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் முக்கியமான மூன்று மசோதாக்கள் கொண்டுவரப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.