Kalaignar Magalir Urimai Thogai June 2026: ஜூன் மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை எப்போது கிடைக்கும் என்பது குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதுகுறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
கடந்த திமுக ஆட்சியில் மகளிருக்காக அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்களில் ஒன்று ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’. ஒவ்வொரு குடும்பத் தலைவிகளும் பயன்பெறும் வகையில் அரசு மாதம் ரூ.1000-ஐ உரிமைத்தொகை என்ற பெயரில் பெண்களின் கணக்கில் வரவு வைத்து வந்தது. 2026 ஆம் ஆண்டு தேர்தலில் இந்த உரிமைத் தொகை உயர்த்தி வழங்கப்படும் என அனைத்து கட்சிகளும் அறிவிப்பு வெளியிட்டன. குறிப்பாக புதுவரவான தமிழக வெற்றிக் கழகமும் உரிமைத் தொகை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறி இருந்தது.
ஆனால் ஆட்சிக்கு வந்த தமிழக வெற்றிக் கழகம், கடந்த ஆட்சியில் பத்தரை லட்சம் ரூபாய் கடன் இருப்பதாகவும் இது குறித்து முழுமையாக ஆராய்ந்த பின்னரே ரூ.2,500 வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டது. இது குடும்பத் தலைவிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தவெக அரசின் நிலைப்பாடு குறித்து எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தையும் தெரிவித்தனர். தொடர்ந்து கடந்த மே மாதம் 15 ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 அனைவரது கணக்கிலும் வரவு வைக்கப்பட்டது. ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.2500 வழங்குவேன் எனக் கூறிவிட்டு ரூ.1,000 மட்டுமே வரவு வைத்தது சர்ச்சையை கிளப்பியிருந்தது.
இந்த நிலையில் ஜூன் மாதத்திற்கான ‘கலைஞர் உரிமைத்தொகை’ எப்போது வரவு வைக்கப்படும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களுடன் பேசிய நிதி அமைச்சர் மரிய வில்சன், “மகளிர் உரிமைத்தொகை திட்டம் மறு சீரமைப்பு செய்வதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாகவும், மகளிர் உரிமைத்தொகை வழங்கலில் பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகவும், அது குறித்து முழுமையாக விசாரணை நடக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் வேறு மாநிலத்தைச் சார்ந்த பெண்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டதாக வரும் தகவல்கள் குறித்து தீவிர ஆய்வு நடைபெறுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
உரிமைத் தொகை திட்டம் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்ட பிறகு, ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் மகளிர் உரிமை தொகை குறித்து முறையான அறிவிப்பு வெளியாகும் என்று அவர் கூறினார். தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டசபை கூட்டம் ஜூலை மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2026-2027 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. மேலும் தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் விவசாயக் கடன் தள்ளுபடி தொடர்பாக ரிசர்வ் வங்கி விதிமுறைகளை பின்பற்றி முழுமையாக தள்ளுபடி செய்யும் வாய்ப்புகளை அரசு ஆராய்ந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
55
எதிர்க்கட்சிகள் கண்டனம்
அடுத்த மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இந்த மாதம் ரூ.1000 வரவு வைக்கப்படுமா? அல்லது ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கப்படுமா? என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரூ.10 லட்சம் கோடி கடனில் இருந்தாலும் அது மாநிலத்தின் கடன் வாங்கும் வரம்பிற்கு உட்பட்ட இருப்பதாகவும், கடன் சுமை இருப்பது தெரிந்து தானே தேர்தல் அறிக்கையில் ரூ.2500 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டீர்கள்? எனவே தேவையில்லாமல் பழி சொல்வதை விட்டுவிட்டு மகளிருக்கு உரிமை தொகை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தவெக அரசை வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.