
திமுக ஆட்சியில் தமிழகம் வளர்ச்சி
தமிழ்நாடு முதலமைச்சர் சீர்மிகு திராவிடமாடல் ஆட்சியின் கீழ் அனைத்து துறைகளிலும், அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறுகின்ற வகையில் கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சி விகிதத்தைவிட 2024-2025ஆம் ஆண்டில் 9.69% வளர்ச்சி விகிதத்துடன் எல்லார்க்கும் எல்லாம் என்ற கோட்பாட்டின்படி அதிகபட்ச வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த வளர்ச்சி விகிதத்தில் கூட்டுறவுத்துறையும் முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதை எண்ணி மகிழ்ச்சியடைகின்றேன். இந்த நல்ல வாய்ப்பினை எனக்கு வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
நகைக்கடன் தள்ளுபடி
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையின் கீழ் நடைபெறும் இந்த திராவிடல் மாடல் ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் கூட்டுறவுத்துறையின் கீழ் பொது நகைக்கடன் தள்ளுபடி திட்டம் 2021-ன் கீழ் 11.83 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.4,918 கோடி அளவிற்கு தள்ளுபடி சான்றிதழுடன், அவர்கள் அடமானம் வைத்த நகைகளும் திருப்பி வழங்கப்பட்டுள்ளன. சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி 2021-ன் கீழ் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட மகளிர் சுயஉதவிக் குழுக் கடன்களில், 2021 மார்ச் 31 அன்றைய தேதியில் நிலுவை உள்ள கடன் தொகை ரூ.2,117 கோடியை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,01,895 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த 10,56,296 மகளிர் பயன்பெற்றுள்ளனர். விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க் கடன்களை கூட்டுறவுச் சங்கங்கள் வழங்கி வழங்குகின்றன.
தொழில்முனைவோருக்கு ரூ.298 கோடியும் கடன்
அதன்படி, 2021 ஏப்ரல் 07 முதல் 2025 மார்ச் 31ம் தேதி வரை 68,01,609 விவசாயிகளுக்கு ரூ.54,968 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. உழவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ் 2021 ஏப்ரல் 07 முதல் 2025 மார்ச் 31ம் தேதி வரை 12,28,416 விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு மற்றும் அதன் தொடர்புடைய பணிகளுக்காக ரூ.6,610 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் உச்ச வரம்பு ரூ.20 இலட்சத்திலிருந்து ரூ.30 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 2021 ஏப்ரல் 07 முதல் மார்ச் 31ம் தேதி வரை 1,99.209 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.11,627 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட 19,791 பெண்களுக்கு 5 சதவீத வட்டியில் ரூ.65 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. சமூக நீதியை மேம்படுத்த 16,836 பணிபுரியும் பெண்களுக்கு ரூ.478 கோடியும், 51,795 மகளிர் தொழில்முனைவோருக்கு ரூ.298 கோடியும் கடன் வழங்கப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்
மாற்றுத் திறனாளிகளை சுயசார்புடையவர்களாக மாற்றவும், நிதி சுதந்திரத்தை வளர்க்கவும், ஏப்ரல் 07 முதல் 2025 மார்ச் 31ம் தேதி வரை 48,353 பயனாளிகளுக்கு ரூ.232 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்புத்திட்டமான குடும்பத்திற்காக அயராது உழைக்கும் மகளிரை கெளரவிக்கும் பொருட்டு, ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்’ கீழ் உரிமைத் தொகை பெறுவதற்காக இதுவரை 8 இலட்சத்து 35 ஆயிரம் வங்கிக் கணக்குகள் மத்திய கூட்டுறவு வங்கிகளில் தொடங்கப்பட்டுள்ளன.
சிறப்புக்கடன் திட்டம்
சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள மாற்றுப்பாலினத்தவர்கள், அவர்தம் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான அடிப்படை நிதிச் சேவைகளைப் பெறுவதில் ஏற்படும் சிரமங்களை களைந்து, அவர்களின் பொருளாதார ரீதியான உள்ளடக்கத்தை உறுதி செய்யும் பொருட்டு ‘சிறகுகள்‘ சிறப்புக்கடன் திட்டம் நவம்பர் 2024-ல் அறிமுகப்படுத்தப்பட்டு, 5% அளவிலான மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் ரூ.1,00,000 வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 2025 மார்ச் 31 வரை 105 மாற்றுப்பாலினத்தவர்களுக்கு ரூ.1.14 கோடி அளவில் கடன் வழங்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல்
மிக்ஜாம் புயல் பாதித்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தனி நபருக்கு ரூ.10,000 வரை சிறப்பு சிறு வணிக கடன் திட்டத்தின் கீழ் 14,647 சிறு வியாபாரிகளுக்கு, 15 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள சிறு வியாபாரிகளுக்கு தனிநபருக்கு ரூ.1.00 லட்சம் வரை 10,301 சிறு வியாபாரிகளுக்கு ரூ.26.12 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டுறவு சங்கங்கள் மூலம் கால்நடைகளை வாங்குவதற்காக 5,966 விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்புக் கடன் ரூ.26.02 கோடி வழங்கப்பட்டுள்ளது.
ஃபெங்கல் புயல்
ஃபெங்கல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தனிநபருக்கு ரூ.10,000 முதல் ரூ.1,00,000 வரை சிறப்பு சிறு வணிக கடன் திட்டத்தின் மூலம் 339 சிறு வியாபாரிகளுக்கு, 1.69 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சுதந்திர தின உரையில் 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும் எனவும் இதன் மூலம் ஜெனரிக் மருந்துகள், பிரண்டட் மருந்துகள், நியூட்டராசெட்டிகல்ஸ் மற்றும் இந்திய மருந்துகள் மக்களுக்கு 25% தள்ளுபடி விலையில் வழங்கப்படும் என அறிவித்தார்கள் அதன்படி தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 1000 முதல்வர் மருந்தகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1500 தொழில்முனைவோர் மற்றும் மருந்தளுநர்கள் நேரடி வேலைவாய்ப்பை பெறுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு 1,94,35,771 குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு நியாயவிலைக்கடைகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவிக்கின்ற எந்த திட்டமாக இருந்தாலும் மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் என்றென்றும் கூட்டுறவுத்துறை முக்கிய பங்கு வகிக்கின்றது. குறிப்பாக சொல்லவேண்டுமேயானால் மகளிர் நலன் சார்ந்த திட்டங்கள், மாணவர் நலன் சார்ந்த திட்டங்கள், ஏழை, எளிய மக்களின் நலன் சார்ந்த திட்டங்கள், தொழிலாளர்கள், உழைக்கும்வர்கத்தினர் என எண்ணற்ற திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தி வருகிறார்கள்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான நல்ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 895 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ,10,14,368 கோடி மூதலீடுகளை ஈர்த்து, 32,04,895 வேலை வாய்ப்புகளை உருவாக்கியதன் விளைவு, 2021-2022ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 8%க்கும் அதிகமான வளர்ச்சி விகிதத்துடன் நிலையான பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டு, கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சி விகிதத்தைவிட 2024-2025ஆம் ஆண்டில் 9.69% வளர்ச்சி விகிதத்துடன் எல்லார்க்கும் எல்லாம் என்ற கோட்பாட்டின்படி அதிகபட்ச வளர்ச்சி அடைந்துள்ளது என்பதில் நாம் பெருமிதம் கொள்வோம் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.