ஜாமீனில் வந்த வேகத்தில் கெத்தாக அமைச்சராகும் செந்தில் பாலாஜி? எந்த துறை தெரியுமா?

First Published | Sep 26, 2024, 12:01 PM IST

செந்தில் பாலாஜிக்கு ஜாமிமீன் கிடைத்ததைத் தொடர்ந்து, தமிழக அமைச்சரவையில் மாற்றம் எதிர்பார்க்கப்படுகிறது. உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் செந்தில் பாலாஜிக்கு முக்கிய துறைகள் ஒதுக்கப்படவுள்ளது.

பண மோசடி- செந்தில் பாலாஜி கைது

அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கி மோசடி செய்ததாக செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்தது.அப்போது அவருக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவரது இருதயப்பகுதியில் அடைப்பு இருந்ததையடுத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. உடல் நிலை சீரானதையடுத்து புழல் சிறையில் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டார்.  அப்போது அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என ஆளுநர் ரவி தமிழக முதலமைச்சருக்கு உத்தரவிட்டார். ஆனால் அமைச்சரவையை மாற்றுவதும் தன்னுடைய அதிகாரம் என முதலமைச்சர் ஸ்டாலின் மறுப்பு தெரிவித்தார்.  

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி

இதனால் ஆளுநர் ரவியே தனிப்பட்ட முறையில் அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கினார். ஆனால் அடுத்த ஒரு சில மணி நேரத்தில் தனது உத்தரவை தானே நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து  நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு பல முறை செந்தில் பாலாஜி முறையிட்டார். ஆனால் அமலாக்கத்துறையின் கடும் எதிர்ப்பால் ஜாமீன்  நிராகரிக்கப்பட்டது.

இதனையடுத்து தானாகவே முன்வந்து அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தார். செந்தில் பாலாஜி வசம் இருந்த மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் தங்கம் தென்னரசு , முத்துசாமியிடம் பிரித்து வழங்கப்பட்டது. இந்தநிலையில் ஜாமீன் கோரி மீண்டும் உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்த நிலையில் ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. 

Tap to resize

தமிழக அமைச்சரவை மாற்றம்

இதன் காரணமாக 471 நாட்களுக்கு பிறகு இன்று மாலை சிறையில் இருந்து செந்தில் பாலாஜி வெளியே வருவார் என தகவல் வெளியாகியுள்ளது. எனவே முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்று 3 வருடங்கள் நிறைவு பெற்று 4-வது ஆண்டில் சென்று கொண்டிருக்கிறது. எனவே அமைச்சரவையில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் படி உதயநிதிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கும் வகையில் துணை முதலமைச்சர் பதவியோடு உள்ளாட்சித்துறை வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

முதலமைச்சரின் அமைச்சரவை மாற்றம்

இதுவரை முதலமைச்சர் ஸ்டாலின் 4 முறை அமைச்சரவையை மாற்றி அமைத்து உள்ளார். முதலாவதாக ராஜகண்ணப்பனிடம் இருந்த போக்குவரத்து துறை  அமைச்சர் சிவசங்கரிடம் ஒப்படைக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் துறை ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அமைச்சர் பதவியில் இருந்து நாசர் நீக்கப்பட்டார். மேலும்  ஐ.பெரியசாமி, பெரிய கருப்பன், மெய்யநாதன், ராமச்சந்திரன், மதிவேந்தன் உள்ளிட்ட சிலரது இலாகா கள் மாற்றப்பட்டன. இதனை தொடர்ந்து சட்ட மன்ற உறுப்பினராக இருந்த உதயநிதிக்கும். டி.ஆர்.பி.ராஜாவும் அமைச்சரவையில் இணைந்தார். பழனிவேல் தியாகராஜனிடம் இருந்த நிதித்துறை மாற்றப்பட்டு அவருக்கு தகவல் தொழில்நுட்ப துறை வழங்கப்பட்டது. 

செந்தில் பாலாஜிக்கு எந்த துறை.?

இந்தநிலையில் செந்தில் பாலாஜிக்கு எப்போது ஜாமீன் கிடைக்கும் என அப்போது அமைச்சரவை மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்த்து இருந்தனர். அந்த வகையில் தற்போது செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்துள்ளது. எனவே தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றி அமைக்கப்படவுள்ளது . அந்த வகையில் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு  ஒதுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் செந்தில் பாலாஜி ஏற்கனவே வகித்து வந்த மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு துறை அவருக்கே ஒதுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

 புதிய அமைச்சர்களாக சேலம் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் மற்றும் ஆவடி நாசர் பெயர் அடிபடுகிறது. மேலும் இரண்டு அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சரவை பதவியேற்பானது அமாவாசைக்கு பிறகு அதாவது அக்டோபர் மாதம் 3ஆம் தேதிக்கு பிறகு நடைபெறும் என தகவல் கூறப்படுகிறது. 

Latest Videos

click me!