கீழடி விவகாரத்தில் திமுக அரசுக்கு ஆதரவு கொடுப்போம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழர்களின் பெருமையை உலகுக்கு பறைசாற்றியது அதிமுக தான் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி நாகரீகம் கி.மு. 3ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என நம்பப்படுகிறது. இது தொடர்பாக இந்திய தொல்லியல் துறை அகழாய்வு நடத்திய நிலையில், தொல்லியல் துறை நிபுணர் அமர்நாத் ராமகிருஷ்ணன், கடந்த 2023 ஜனவரியில் இந்திய தொல்லியல் துறை இயக்குநரிடம் ஆய்வறிக்கை சர்ப்பித்தார். ஆனால் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் எனக்கோரி இந்திய தொல்லியல் துறை இந்த ஆய்வறிக்கையை திருப்பி அனுப்பியது.
24
மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
இதற்கு தமிழ்நாட்டில் கண்டங்கள் எழுந்த நிலையில், ''கீழடி அகழாய்வு முடிவுகளை அங்கீகரிக்க இன்னும் அறிவியல் பூர்வமான ஆய்வுகள், முடிவுகள் வேண்டும். அறிவியல் பூர்வமான முடிவுகள் வந்த பிறகே அதனை அங்கீகரிக்க முடியும்'' என்று மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் தெரிவித்தார். தமிழர்களின் வரலாற்றை புறம்தள்ளும் மத்திய அரசுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.
34
கீழடி அகழாய்வு மையத்தில் எடப்பாடி பழனிசாமி
மேலும் கீழடி விவகாரத்தில் தமிழக மக்களின் பக்கம் நின்று பாஜக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க கூட எடப்பாடி பழனிசாமி பயப்படுகிறார் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இதன்பிறகு பிரிட்டன் ஆய்வகத்தில் கீழடியில் கிடைத்த மண்டை ஓடுகளை வைத்து, 2,500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகங்கள் வடிவமைக்கப்பட்டு அதன் படங்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி அகழாய்வு மையத்தை எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் பார்வையிட்டார்.
கீழடியை வைத்து அரசியல்
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''கீழடி அகழாய்வு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இங்கு கண்டறியப்பட்ட பொருட்கள் புளோரிடா கொண்டு செல்லப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளன. தற்போது கீழடியை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர். அது யார் என்பது அனைவருக்கும் தெரியும். தமிழகத்தில் இதுவரை நடந்த 39 அகழாய்வு பணிகளில் 33 அ.தி.மு.க. ஆட்சியில் தான் நடத்தப்பட்டது'' என்றார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, ''தமிழர்களின் பெருமையை கீழடி அகழ்வாராய்ச்சி மூலம் உலகிற்கு பறைசாற்றியது அதிமுக அரசு தான். கீழடி தொடர்பாக மத்திய அரசு என்ன விளக்கம் கேட்டது? அதற்கு திமுக அரசு என்ன விளக்கம் கேட்டது என்பது தெரியவில்லை. இருபக்கமும் என்ன முரண் நிலவுகிறது என்பது தெரியவில்லை. இருந்தாலும் கீழடி தொடர்பாக மாநில அரசு கேட்பவைக்கு அதிமுக துணை நிற்கும்'' என்று தெரிவித்துள்ளார்.