தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெற உள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்கு திமுக, அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டன. இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யும் பணிக்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
திமுக பிடிவாதம்
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த முறையும் இதேபோல் 6 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேட்டு வருகிறது. ஆனால் இந்த முறை தேமுதிக, மக்கள் நீதி மையம் போன்ற புதிய கட்சிகள் இணைந்துள்ளதால், பழைய கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகளைக் குறைக்க திமுக திட்டமிட்டுள்ளது. இதனால் 5 தொகுதிகளை மட்டுமே வழங்க முடியும் என திமுக பிடிவாதமாக உள்ளது.
விடாப்பிடியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு
காங்கிரஸ் கட்சிக்குத் தொகுதிகளை உயர்த்திக் கொடுத்த திமுக, தங்களுக்குத் தொகுதிகளைக் குறைப்பது நியாயமில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தங்களுடைய ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தது. ஆனாலும் திமுக இறங்கி வரவில்லை. ஆனாலும் தங்களுக்கு 6 தொகுதிகள் ஒதுக்க வேண்டும். 5 தொகுதிகள் கொடுத்தால் நாங்கள் விரும்பும் தொகுதியில் தான் போட்டியிடுவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விடாப்பிடியாக உள்ளது.
கூட்டணியில் நீடிப்பதா? அல்லது தனித்து போட்டியிடுவதா?
CPM மாநிலக் குழுக் கூட்டத்தில் இது குறித்துத் தீவிரமாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. திமுக தனது நிலையில் மாற்றிக்கொள்ளாவிட்டால், கூட்டணியில் நீடிப்பதா? அல்லது தனித்து போட்டியிடுவதா? என்பது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அப்போது திமுக கேட்கும் தொகுதிகளை கொடுக்காவிட்டால் கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிடுவோம் என முடிவு செய்ததாக தகவல்கள் கூறுகின்றன.
இறுதி முடிவு எப்போது?
பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற சித்தாந்தத்தில் திமுக கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி திமுகவை விட்டு வெளியேறுமா? என்பதை உறுதியாக சொல்ல முடியாது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டால் தான் இந்த விவாகரத்தில் ஒரு முடிவு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.