Chennai to Trichy Train Speed: ரயிலில் சென்னை டூ திருச்சிக்கு இனிமேல் வெறும் 3.30 மணி நேரத்தில் செல்ல முடியும். இந்த வழித்தடத்தில் 130 கிமீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுவது குறித்து சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் தொலைதூர இடங்களுக்கு வசதியாகவும், களைப்பின்றியும் பயணம் செய்ய முடியும் என்பதால் தினமும் பல லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். நமது நாட்டில் சொகுசு ரயில்கள், அதிவேக விரைவு ரயில்கள், விரைவு ரயில்கள், சாதாரண முன்பதிவில்லாத ரயில்கள், மெமு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை எழும்பூர்-தாம்பரம்-செங்கல்பட்டு-விழுப்புரம்-திருச்சி-மதுரை-நெல்லை-நாகர்கோவில் வழித்தடம் எப்போதும் பிசியாவும், தெற்கு ரயில்வேக்கு அதிக வருமானம் ஈட்டித் தரும் வழித்தடமாகவும் உள்ளது. இந்த நிலையில், தென் மாவட்ட ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், சென்னை எழும்பூர் முதல் திருச்சி வரையிலான பிரதான இரட்டை ரயில் பாதையில் ரயில்களின் இயக்க வேகத்தை மணிக்கு 130 கிலோமீட்டராக உயர்த்தும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
24
130 கிமீ வேகத்தில் இயங்கப்போகும் ரயில்கள்
இந்த பிரம்மாண்ட திட்டமானது 2027 ஆம் ஆண்டுக்குள் முழுமை பெற்று பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சென்னை டூ திருச்சி இடையே 336.57 கி.மீ தூர வழித்தடத்தில் ரயில்கள் அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. பயண நேரத்தை மேலும் குறைக்கும் நோக்கத்துடன், இந்திய ரயில்வே நிர்வாகம் இந்தப் பாதையை மணிக்கு 130 கி.மீ வேகத்தை தாங்கும் வகையில் தரம் உயர்த்தும் பணிகளை மேற்கொண்டுள்ளது.
அதாவது ரயில்களின் கூடுதல் வேகத்தையும் எடையையும் முழுமையாகத் தாங்கும் வகையில், பழைய 52 கிலோ எடையிலான தண்டவாளங்கள் முழுமையாக அகற்றப்பட்டு, அவற்றுக்கு பதிலாக 60 கிலோ எடை கொண்ட அதிநவீன வலிமையான தண்டவாளங்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. ரயில்கள் தடமாறு இடங்களில் மற்றும் சந்திப்புகளில் தங்களது வேகத்தைக் குறைக்காமல் சீராகச் செல்லும் பொருட்டு, பாரம்பரிய சுவிட்சுகளுக்கு மாற்றாக நவீன 'திக் வெப் சுவிட்சுகள்' பொருத்தப்பட்டு வருகின்றன.
34
நவீன இன்டர்லாக்கிங் சிக்னல் அமைப்புகள்
குறிப்பாக, சென்னை எழும்பூர் முதல் விழுப்புரம் வரையிலான வழித்தடத்தில் மட்டும் 195 இடங்களில் இந்த மாற்றங்கள் செய்யப்படுகின்றன. பல்லாவரம் பகுதியில் இதற்கான பணிகள் தற்போது மிகத் தீவிரமாக நடந்து வருகின்றன. தண்டவாளங்களில் உள்ள வளைவுப் பகுதிகளில் காணப்படும் வடிவமைப்புச் சிக்கல்கள் முற்றிலுமாக நிவர்த்தி செய்யப்படுவதுடன், நவீன இன்டர்லாக்கிங் சிக்னல் அமைப்புகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
தண்டவாளங்களில் கால்நடைகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பாராதவிதமாக நுழைவதைத் தடுத்து, விபத்துகளைத் தவிர்க்கும் பொருட்டு பாதையின் இருமருங்கிலும் உறுதியான பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படுகின்றன. தடையில்லா அதிவேக ரயில் போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில், வழியில் உள்ள லெவல் கிராசிங் கேட்டுகள் படிப்படியாக அகற்றப்பட்டு, அவற்றுக்குப் பதிலாக நவீன சாலை மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
இந்த உள்கட்டமைப்புப் பணிகள் அனைத்தும் திட்டமிட்டபடி நிறைவடைந்து, ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் (CRS) அதிகாரப்பூர்வ ஒப்புதல் பெறப்பட்டவுடன், வந்தே பாரத், தேஜஸ் மற்றும் தென் மாவட்டங்களை இணைக்கும் அதிவேக விரைவு ரயில்கள் அனைத்தும் மணிக்கு 130 கி.மீ வேகத்தில் சீறிப்பாயும். இதன் விளைவாக, சென்னை மற்றும் திருச்சிக்கு இடையிலான பயண நேரம் கணிசமாகக் குறையும்.
அதாவது இப்போது சென்னையில் இருந்து திருச்சிக்கு தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் 3 மணி நேரம் 50 நிமிடங்களில் செல்கிறது. வந்தே பாரத் 3 மணி நேரம் 55 நிமிடங்களிலும், மற்ற சூப்பர் பாஸ்ட் ரயில்கள் 5 மணி நேரம் முதல் 5.30 மணி நேரங்களில் செல்கின்றன. இனிமேல் இந்த வழித்தடத்தில் ரயில்கள் 130 கிமீ வேகத்தில் இயக்கப்பட்டால் சென்னை டூ திருச்சி இடையேயான பயண நேரம் அரை மணி நேரம் வரை குறைய வாய்ப்புள்ளது.