கடந்த ஜூலை 31ஆம் தேதியே இந்த விவகாரம் அரசின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகக் குறிப்பிட்ட சீமான், 115 நாட்களாக ஏன் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். புகார் தொடர்பாக எந்தச் சம்பவமும் நடைபெறவில்லை என அமைச்சர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதன் பின்னணி என்ன என்றும் அவர் வினவியுள்ளார். மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பொறுத்துக்கொள்ளாத கொள்கையைக் கடைப்பிடிப்பதாகக் கூறும் முதல்வர், ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீதான புகாரில் ஏன் மௌனம் காக்கிறார் என்றும் விமர்சித்துள்ளார்.
மற்ற கைது நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டுப் பேச்சு
தாராபுரம் இடைத்தேர்தல் வழக்கு, இசை மதிவாணன் கைது, சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு போன்ற விவகாரங்களில் அரசு காட்டிய வேகத்தை, ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீதான புகாரிலும் காட்டியிருக்க வேண்டாமா என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். மாவட்ட ஆட்சியர் பத்மஜா அளித்த புகார் குறித்து முதல்வர் கருத்துத் தெரிவிக்காததையும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், நீதிபதி விக்டோரியா கௌரி இந்த விவகாரம் குறித்துப் பேசியபோது அவருக்கு எதிராக சமூக ஊடகங்களில் வெளியான அவதூறுகளைக் கண்டிக்காதது ஏன் என்றும் அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.