பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதி 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் அப்போது தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. முதலில் ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழியாக கொலை நடைபெற்றதாக கூறப்பட்டு வந்த நிலையில் சென்னை காவல் ஆணையர் மாற்றப்பட்டு அருண் பொறுப்பேற்ற பிறகு சினிமாவை மிஞ்சும் வகையில் அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல் வெளியானது.
24
பிரபல ரவுடி தாதா நாகேந்திரன் உள்ளிட்ட 27 பேர் கைது
இந்த கொலை சம்பவம் தொடர்பாக முதல் குற்றவாளியாக ஆயுள் தண்டனை பெற்று வேலூர் சிறையில் உள்ள பிரபல ரவுடி தாதா நாகேந்திரன், இரண்டாவது குற்றவாளியாக ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, மூன்றாவதாக நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமன், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியான திருவேங்கிடம் போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுதொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
34
ஆயுதங்கள் பதுக்கல்
இதனிடையே ரவுடி நாகேந்திரனின் தம்பி ரமேஷ் மற்றும் உறவினர்களின் வீடுகளில் கடந்த ஜனவரி மாதம் 7ம் தேதி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, 51 பட்டாக் கத்திகள், 1 வாக்கி டாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, நாகேந்திரனின் தம்பி ரமேஷ் (44) மற்றும் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த முருகன் (45), தம்பிதுரை என்கின்ற தமிழரசன் (40), தமிழழகன் (39), கிஷோர் (30), சுகுமார் (29), தனுஷ் (28) உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நாகேந்திரனின் 2-வது மகன் அஜித் ராஜுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர் தலைமறைவானதை அடுத்து அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.