மணப்பெண்களுக்கு குட் நியூஸ்... 8 கிராம் தங்கம் + பட்டுப்புடவை; அண்ணன் சீர் திட்டத்திற்கு ரூ. 812 கோடி ஓதுக்கீடு: முழு விபரம்!

Published : Oct 06, 2026, 06:36 PM IST

தமிழ்நாட்டில் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குள் உள்ள ஏழைக் குடும்ப மணப்பெண்களுக்குத் திருமணத்தின்போது 8 கிராம் (1 பவுன்) தங்க நாணயமும், ஒரு பட்டுச்சேலையும் வழங்கும் 'அண்ணன் சீர்' திட்டத்திற்கு ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை.

PREV
14
மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்கம், பட்டுச்சேலை

தமிழ்நாட்டில் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்குத் திருமணத்தின்போது 8 கிராம் (1 பவுன்) தங்க நாணயமும், 1 பட்டுச்சேலையும் வழங்கும் அண்ணன் சீர் திட்டத்தை ஆண்டுதோறும் செயல்படுத்த நிர்வாக அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தை நடப்பு நிதியாண்டில் செயல்படுத்துவதற்காக முதற்கட்டமாக ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

24
திட்டத்தின் பின்னணி & நோக்கம்

தமிழர் மரபில் திருமணத்தின்போது அண்ணன் வழங்கும் 'சீர்' என்பது அன்பு, பாசம், பாதுகாப்பு மற்றும் பொறுப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது. தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 5 லட்சம் திருமணங்கள் நடக்கின்றன. புதிய வாழ்க்கையைத் தொடங்கும் மணப்பெண்களுக்கு அண்ணனாக இருந்து அரசின் ஆதரவை வெளிப்படுத்தும் நோக்கில், 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை வழங்கப்படும் என்று கடந்த 2026 ஆகஸ்ட் 5 அன்று தாக்கல் செய்யப்பட்ட 2026-27-ம் ஆண்டுக்கான திருத்த வரவு செலவு திட்ட மதிப்பீட்டு உரையில் (பட்ஜெட்) நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, சமூக நல இயக்குநர் விடுத்த கருத்துருவை ஏற்று, இத்திட்டத்திற்கான நிர்வாக அனுமதியையும், ரூ.812 கோடி நிதி ஒதுக்கீட்டையும் வழங்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி அதிகாரப்பூர்வமாகத் தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

34
அரசாணையின் முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள்:

தமிழ்நாட்டில் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குள் உள்ள ஏழைக் குடும்பங்களை சேர்ந்த மணப்பெண்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். தமிழ்நாட்டில் நடைபெறும் திருமணங்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியுடைய மணப்பெண்களுக்கு மட்டுமே 8 கிராம் (22 காரட்) தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப்புடவை வழங்கப்படும். இந்த அரசாணை வெளியிடப்படும் நாள் முதல் நடைபெறும் திருமணங்களுக்கு இத்திட்டம் உடனடியாகப் பொருந்தும்.

இத்திட்டத்திற்கான பயனாளிகளின் விண்ணப்பங்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாகப் பெறப்படும். தகுதி மற்றும் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும். தமிழ்நாடு திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளி சட்டத்தின் கீழ் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, தகுதியான ஒப்பந்ததாரர் மூலமாக தங்க நாணயங்களும் பட்டுப்புடவைகளும் கொள்முதல் செய்யப்படும். கொள்முதல் ஆணை வழங்கப்படும் நாளன்று காலையில் 'ஐ.பி.ஜே.ஏ' (IBJA) அமைப்பால் நிர்ணயிக்கப்படும் விலையின் அடிப்படையில் தங்கத்தின் விலை கணக்கிடப்படும்.

44
தேர்தல் வாக்குறுதி மீறலா? எழுந்த அரசியல் சர்ச்சை

இதனிடையே, அண்ணன் சீர் திட்டத்தில் பயனாளிகளுக்கான வருமான வரம்பை தவெக அரசு குறைத்துள்ளதாக அரசியல் அரங்கில் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சட்டப்பேரவைத் தேர்தலின்போது தவெகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தில், ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்குள் உள்ள குடும்பங்களின் பெண்கள் பயனடைவார்கள் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது.ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.2.5 லட்சமாகச் சுருக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

வாக்குறுதியில் ரூ.5 லட்சம் எனக் கூறிவிட்டு, அரசாணையில் ரூ.2.5 லட்சமாகக் குறைத்ததைச் சுட்டிக்காட்டியுள்ள அதிமுக எம்.பி. இன்பதுரை, "இது 'அண்ணன் சீர் திட்டம்' அல்ல; தவெக அரசின் அண்ணன் சுருக்குத் திட்டம் என்று மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories