Tamil Nadu Lok Sabha Seats: தமிழ்நாட்டில் புதிதாக உருவாகும் 20 எம்பி தொகுதிகள் எவை? உத்தேச பட்டியல் இதோ

Published : Nov 28, 2026, 06:53 PM IST

Tamil Nadu Lok Sabha Seats: தமிழ்நாட்டில் தற்போது உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயர வாய்ப்புள்ளதாக புதிய தொகுதி மறுவரையறை மசோதா தெரிவிக்கிறது. இதில் எந்தெந்த ஊர்கள் இடம்பெற்றுள்ளன? உண்மையான நிலவரம் என்ன? என்று பார்க்கலாம்.

PREV
15
தமிழக மக்களவைத் தொகுதிகள்

தமிழ்நாட்டில் தற்போது 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள அரசியலமைப்பின் 132-வது திருத்த மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான புதிய மசோதாக்கள், ஒவ்வொரு மாநிலத்திலும் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை தற்போதைய எண்ணிக்கையில் இருந்து 50 சதவீதம் உயர்த்த முன்மொழிகின்றன. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் தமிழ்நாட்டின் தொகுதிகள் எண்ணிக்கை 39-ல் இருந்து சுமார் 59 ஆகலாம். அதாவது கூடுதலாக 20 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. எனினும், இந்த மசோதாக்கள் இன்னும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை. நவம்பர் 30-ம் தேதி தொடங்கும் சிறப்புக் கூட்டத்தொடரில் அவை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளன.

25
திமுக ஆதரவு தெரிவித்தது ஏன்?

தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் குறையக்கூடாது என்பதில் திமுக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. குறிப்பாக, மக்களவையில் தமிழ்நாட்டின் தற்போதைய 7.18 சதவீதப் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், மாநிலங்களுக்கு இடையிலான இடங்களின் விகிதம் மேலும் 25 ஆண்டுகளுக்கு தொடர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது. இந்தக் கோரிக்கைகள் புதிய மசோதாவில் இடம்பெற்றுள்ளதாகக் கூறி, நவம்பர் 28-ம் தேதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மசோதாவுக்கு ஆதரவளிக்க முடிவு செய்யப்பட்டது. இதனை திமுக மூத்த தலைவர் ஆ.ராசாவும் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார்.

35
வைரலாகும் 20 புதிய தொகுதிகளின் பெயர்கள்

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மேற்கு சென்னை, திருவொற்றியூர் அல்லது கிழக்கு சென்னை, ஆவடி, தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய இடங்கள் புதிய தொகுதிகளாக உருவாகலாம் என ஒரு உத்தேசப் பட்டியல் பரவி வருகிறது. வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் ஓசூர், ராணிப்பேட்டை, வந்தவாசி, திண்டிவனம் ஆகிய இடங்களும், கொங்கு மண்டலத்தில் ஆத்தூர், ராசிபுரம் அல்லது திருச்செங்கோடு, கோபிச்செட்டிப்பாளையம், வடக்கு கோவை அல்லது மேட்டுப்பாளையம், பல்லடம் ஆகிய இடங்களும் குறிப்பிடப்படுகின்றன. மத்திய மற்றும் தென் மாவட்டங்களில் பழனி, முசிறி, பட்டுக்கோட்டை அல்லது மன்னார்குடி, மேலூர், திருச்செந்தூர், கோவில்பட்டி ஆகிய இடங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், இந்த 20 பெயர்களுக்கும் இதுவரை அதிகாரப்பூர்வ ஒப்புதல் கிடையாது.

45
புதிய தொகுதிகளை முடிவு செய்வது யார்?

மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, தேவையான அரசியலமைப்பு நடைமுறைகள் முடிந்த பிறகு மத்திய அரசு தொகுதி மறுவரையறை ஆணையத்தை அமைக்கும். இந்த ஆணையமே மாநிலத்திற்குள் தொகுதிகளின் எல்லைகளை வரையறுத்து, புதிய தொகுதிகளின் பெயர்கள் மற்றும் எல்லைகளைத் தீர்மானிக்கும். மக்கள் தொகை விவரங்கள், புவியியல் அமைப்பு உள்ளிட்ட அம்சங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். வரைவு எல்லைகள் வெளியிடப்பட்ட பிறகு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடம் கருத்துகள், ஆட்சேபனைகள் பெறப்படும். அதன் பின்னரே இறுதி அறிவிப்பு வெளியாகும். எனவே, தற்போது பரவி வரும் பட்டியலை அதிகாரப்பூர்வமானதாகக் கருத முடியாது.

55
பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வருமா?

புதிய மசோதாக்களின் முக்கிய நோக்கங்களில் ஒன்று மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதாகும். தொகுதி மறுவரையறை முடிந்த பிறகு பெண்களுக்கான இடங்கள் ஒதுக்கப்படும் வகையில் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் சுமார் 59 மக்களவைத் தொகுதிகள் உருவானால், அவற்றில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு ஒதுக்கப்படலாம். ஆனால் எந்தத் தொகுதிகள் பெண்களுக்காக ஒதுக்கப்படும் என்பதை ஆணையமே தீர்மானிக்கும். 2029 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக இந்த நடைமுறையைச் செயல்படுத்த மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது. மசோதாக்கள் நிறைவேறி, ஆணையத்தின் பணிகள் முடிந்த பிறகே தமிழகத்தின் புதிய தொகுதிகள் குறித்த முழுமையான விவரம் தெரியவரும்.

Read more Photos on
click me!

Recommended Stories