திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகிலுள்ள விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு அலுவலர் கிரிக்கெட் மூர்த்தி, இன்று குருவிகளின் தோழனாக, சூழலியல் நாயகனாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
கிரிக்கெட் மூர்த்தி குருவிக் கூடு செய்யும் பணியின் போது
கிரிக்கெட் மூர்த்தி, திருநெல்வேலி மாவட்ட பாபநாசம் பகுதியில் ஆற்றில் இருந்து பரிகாரத்துணிகளை எடுத்தல், ஆற்று படித்துறைகளை சீரமைத்தல், சுற்றுச்சுழல் விழிப்புணர்வு என பல்வேறு சூழல் நல பணிகளில் ஈடுபட்ட இவருக்கு தமிழக அரசு கீரின் சாம்பியன் விருது வழங்கி சிறப்பித்துள்ளது. இன்று உலக சீட்டு குருவிகள தினத்தை முன்னிட்டு சுற்றுச்சுழல் ஆர்வலர் கிரிக்கெட் மூர்த்தி தனது குருவிகள் விழிப்புணர்வு பணிகள் குறித்து நமது ஏசியா நெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பிரத்தியோக பேட்டி
26
பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய போது எடுத்த புகைப்படம்
வணக்கம் மூர்த்தி ஐயா, உங்கள் குருவி சேவை பற்றி விரிவாக சொல்லுங்களேன்.
வணக்கம். நான் திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு அலுவலர். புள்ளியியல் துறையில் பணியாற்றினேன். கடந்த ஏழு வருடங்களாக குருவி கூடுகள் செய்து மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இலவசமாக வழங்கி வருகிறேன். இதுவரை 20,000 கூடுகள் கொடுத்திருக்கிறேன்.
20,000 கூடுகளா? அது எப்படி சாத்தியம்?
(சிரிக்கிறார்) சாத்தியம் தான். 210 பள்ளிகளில் குருவி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறேன். கூடுகள் எப்படி செய்வது என்று மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறேன். அவர்கள் மூலம் குறைந்தது 10,000 கூடுகளாவது செய்திருப்பார்கள். நானும் எனது குடுமப உறுப்பினர்களும் சேர்ந்து 20,000 கூடுகளுக்கு மேல் செய்து பொதுமக்கள் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளோம்.
36
நெல்லை முன்னாள் ஆட்சியர் விஷ்ணு ஐ.ஏ.எஸ் சிறுவர்களுக்கு குருவிக்கூடு வழங்கிய போது
ஒரு கூட்டில் எத்தனை குருவிகள் வரை இனப்பெருக்கம் செய்யும்?
ஒரு கூடு நான்கு வருடம் வரை நிலைக்கும். ஒரு கூட்டில் இருந்து 30 குருவிகள் வரை இனப்பெருக்கம் செய்யும். அப்படியென்றால், 20,000 கூடுகள் மூலம் 6,00,000 குருவிகள் வரை பெருகியிருக்கும். அதில் 30% கழித்தாலும், 4,20,000 குருவிகள் வரை இனப்பெருக்கம் செய்திருக்க வாய்ப்புள்ளது.
46
ஒரு கூடு செய்ய எவ்வளவு செலவாகும்?
ஒரு கூடு செய்ய 40 ரூபாய் வரை செலவாகும். ஆனால், நான் அனைத்தையும் இலவசமாகவே வழங்குகிறேன்.
ஏன் இலவசமாக செய்கிறீர்கள்?
குருவிகள் நம் வீட்டுக்கு வருவது ஒரு பாக்கியம். அவற்றைப் பாதுகாப்பது நம் கடமை. நான் செய்த இந்தச் சிறிய முயற்சியால், லட்சக்கணக்கான குருவிகள் இனப்பெருக்கம் செய்துள்ளன என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அதோடு, குருவிகள் பற்றி நல்ல விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது.
56
ஓய்வு பெற்ற பின் ஏன் இந்த பணியை தேர்ந்தெடுத்தீர்கள்?
நான் சுற்றுசுழலில் மிகுந்த ஆர்வம் கொண்டவன். அதனால் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே சுற்றுசுழல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பல்வேறு கிரிக்கெட் போட்டிகளை நடத்தியுள்ளேன். எனவே இந்த பகுதி மக்களால் கிரிக்கெட் மூர்த்தி என்று அழைக்கப்படுகிறேன். ஓய்வு பெற்ற பின் சுற்றுச் சூழல் பணியில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன். சிறு வயதில் இருந்து குருவிகளை பார்த்து வளர்ந்தவன். இன்று அவை குறைந்து வருவது வருத்தமாக இருந்தது. அதனால் தான் இந்த பணியை செய்தேன்.
உங்கள் குடும்பத்தினர் எப்படி ஒத்துழைப்பு அளிக்கிறார்கள்?
என் குடும்பத்தினர் எனக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறார்கள். அவர்கள் இல்லாமல் இது சாத்தியமில்லை.
66
எதிர்கால திட்டம் என்ன?
இன்னும் நிறைய பள்ளிகளுக்கு சென்று குருவி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். கூடு செய்யும் முறைகளை மாணவர்களுக்கு கற்று தரவேண்டும்.
இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
இளைஞர்கள் சுற்றுச் சூழல் பாதுகாப்பில் அக்கறை காட்ட வேண்டும். குருவிகள் போன்ற பறவைகளை பாதுகாக்க முன்வர வேண்டும்.
உங்கள் நேரத்திற்கு நன்றி மூர்த்தி ஐயா.
நன்றி.
"கிரிக்கெட் மூர்த்தி போன்றவர்களின் தன்னலமற்ற சேவை, இந்த பூமியை இன்னும் அழகானதாக மாற்றுகிறது".
குருவிக்கூடு (இலவசம்) வேண்டுவோர் கிரிக்கெட் மூர்த்தி அவர்களை 9942307679 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.