
India vs New Zealand 2nd Test Pune Pitch Records: நாளை 24ஆ தேதி மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் 2ஆவது டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த மைதானத்தில் எந்த அணி முதலில் டாஸ் ஜெயிக்கிறதோ அந்த அணி என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். அதற்கு முன்னதாக பெங்களூரு டெஸ்ட் போட்டியில் என்ன நடந்தது என்று சுருக்கமாக தெரிந்து கொள்வோம். 2ஆவது டெஸ்ட் போட்டிக்கு அது ரொம்பவே முக்கியம்.
பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டாஸ் ஜெயிச்சு பேட்டிங் தேர்வு செய்தார். ஆனால், 16ஆம் தேதி முதல் நாள் பெய்த மழையின் காரணமாக பிட்ச் பவுலர்களுக்கு சாதகமானதாக மாறிவிட்டது. அப்படியிருக்கும் போது டாஸ் சாதகமாக விழுந்தும் ரோகித் சர்மா பவுலிங் செய்யாது முதல் தவறு.
அதன் பிறகு இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்குள் சுருண்டது. நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 402 ரன்கள் குவித்து 356 ரன்கள் முன்னிலை பெற்றது. 2ஆவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா, விராட் கோலி, சர்ஃபராஸ் கான், ரிஷப் பண்ட் ஆகியோர் சிறப்பாக விளையாடவே இந்திய அணி 462 ரன்கள் குவித்தது.
மேலும், 106 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இதில், நியூசிலாந்து 2 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலமாக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.
இதைத் தொடர்ந்து நாளை 24ஆம் தேதி வியாழக்கிமை 2ஆவது டெஸ்ட் போட்டி புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த மைதானத்தில் 2017 முதல் 2019 வரையில் இந்தியா 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் ஒரே ஒரு போட்டியில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது.
2019 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர் 601/5 எடுத்து டிக்ளேர் செய்தது. இந்தப் போட்டியில் விராட் கோலி 254 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மாயங்க் அகர்வால் 108 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 91 ரன்களும் எடுத்தனர்.
தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 275/10 ரன்கள் எடுக்க, 2ஆவது இன்னிங்ஸில் 189/10 ரன்கள் எடுத்து இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆனால், 2017ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 105 ரன்களுக்கும், 2ஆவது இன்னிங்ஸில் 107 ரன்களுக்கும் ஆல் அவுட்டானது. இதில் 333 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இந்த 2 டெஸ்ட் போட்டிகளின்படி முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றிருக்கிறது. அதே போன்று தான் நாளை 24ஆம் தேதி டாஸ் ஜெயிக்கும் அணி முதலில் பேட்டிங் செய்தால் மட்டுமே அதிக வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. மேலும், 4ஆவது இன்னிங்ஸில் ரன்கள் சேர்ப்பது கடினம் தான்.
முதல் இன்னிங்ஸ் ஆவரேஜ் ஸ்கோர் 430 ரன்கள். 2ஆவது இன்னிங்ஸ் ஆவரேஜ் ஸ்கோர் 190 ரன்கள் ஆகும். முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று பலம் வாய்ந்த அணியாக திகழும் நியூசிலாந்து 2ஆவது போட்டியில் டாஸ் ஜெயிச்சால் பேட்டிங் தான் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பெங்களூரு டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியாவை 46 ரன்களுக்கு சுருட்டியது.
இதே போன்று இந்தியா டாஸ் ஜெயிச்சு பேட்டிங் செய்தால் நியூசிலாந்திற்கு தரமான பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஞ்சி டிராபியில் சிறப்பாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும் பிளேயிங் 11ல் குல்தீப் யாதவ்விற்கு பதிலாக அணியில் இடம் பெறலாம் அல்லது கேஎல் ராகுலுப் பதிலாக அணியில் இடம் பெறலாம் என்று தெரிகிறது.
குல்தீப் யாதவிற்கு பதிலாக வாஷி இடம் பெற்றால் கேஎல் ராகுலுக்குப் பதிலாக ஆகாஷ் தீப் மற்றொரு வேகப்பந்து வீச்சாளராக அணியில் இடம் பெறலாம் என்று தெரிகிறது. ஏனென்றால், வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஆகாஷ் தீப் 2 போட்டிகளில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.