இந்தியா 'ஏ' மற்றும் இலங்கை 'ஏ' அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு தொடரின் மூன்றாவது போட்டி இலங்கையின் தம்புலாவில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 49.2 ஓவர்களில் 265 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சூர்யான்ஷ் ஷெட்ஜ் 66 பந்தில் 72 ரன்கள் விளாசினார். அதே வேளையில் ஐபிஎல் தொடரில் தனது அதிரடி பேட்டிங்கால் ரசிகர்களை கவர்ந்த வைபவ் சூர்யவன்ஷி, இந்தியா 'ஏ' அணிக்காக மீண்டும் ஒருமுறை சொதப்பியுள்ளார். இன்றைய போட்டியில் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி 14 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் 21 ரன்கள் எடுத்து கேட்ச் ஆனார்.
ஐபிஎல்லில் கலக்கல்; வெளிநாட்டில் சொதப்பல்
2026 ஐபிஎல் தொடரில் வைபவ் சூர்யவன்ஷி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி, ஆரஞ்சு கேப் உட்பட ஐந்து முக்கிய விருதுகளை வென்றார். இதன் மூலம் பிசிசிஐ தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்த அவர், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணங்களுக்கான இந்திய சீனியர் அணியிலும் இடம்பிடித்தார். அதற்கு முன்னதாக, இந்தியா 'ஏ' அணியுடன் முத்தரப்பு தொடரில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளார். ஆனால் இந்த தொடர் முழுவதும் அவர் சொதப்பி வருகிறார்.