
சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்தது மட்டுமின்றி, இந்திய கிரிக்கெட் அணிக்கு பல வெற்றிகளை அளித்த நட்சத்திர வீரர்கள் பலர் உள்ளனர். இருப்பினும், அவர்கள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபோது மைதானத்தில் இருந்து பெற வேண்டிய முழு மரியாதையையும் பெற முடியவில்லை. சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடும்போது இந்த விஷயத்தில் இவர்கள் துரதிர்ஷ்டவசமான இந்திய கிரிக்கெட் வீரர்கள் என்று சொல்லலாம். வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால்.. அவர்களில் சில சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர். அப்படிப்பட்ட 5 சிறந்த கிரிக்கெட் வீரர்களைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்..!
மகேந்திர சிங் தோனி
மகேந்திர சிங் தோனி (MS Dhoni) இந்திய அணிக்கு பல வரலாற்று தருணங்களை அளித்துள்ளார். தோனியின் தலைமையில் இந்திய அணி ஐசிசியின் அனைத்து போட்டி்களிலும் கோப்பையை வென்றுள்ளது. இந்தியா ஐசிசி டி20 உலகக் கோப்பை (2007), 50 ஓவர் உலகக் கோப்பை (2011), ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி (2013) பட்டங்களை தோனியின் தலைமையில் வென்றது. டிசம்பர் 2014ல், தோனி திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து தோனி ஆகஸ்ட் 15, 2020 அன்று ஒருநாள், டி20 சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். இந்தியாவிற்கு அற்புதமான தருணங்களை அளித்த தோனி நிச்சயம் வழியனுப்பு விழாவுக்கு தகுதியானவர். ஆனால் அவருக்கு அப்படியான சந்தர்ப்பம் அமையவில்லை.
வீரேந்திர சேவாக் இந்தியாவுக்காக 104 டெஸ்ட்களில் விளையாடி 49.34 சராசரியுடன் 8586 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 23 சதங்கள் மற்றும் 32 அரைசதங்கள் அடங்கும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 319. வீரூ 251 ஒருநாள் போட்டிகளில் 15 சதங்கள் மற்றும் 38 அரைசதங்களுடன் 8273 ரன்கள் எடுத்தார். இந்த வடிவில் வீரூவின் அதிகபட்ச ஸ்கோர் 219. இது தவிர, வீரூ 19 டி20 போட்டிகளில் 394 ரன்கள் எடுத்தார், அதில் 68 ரன்கள் அவரது அதிகபட்ச ஸ்கோர். வீரேந்திர சேவாக் 2015 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார், ஆனால் அவருக்கு விடைபெறும் போட்டியின் மரியாதை கிடைக்கவில்லை.
கௌதம் கம்பீர் 2018ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால் அவருக்கு விடைபெறும் போட்டியின் மரியாதை கிடைக்கவில்லை. 2007 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும், 2011ல் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் உலகக் கோப்பையிலும் கௌதம் கம்பீரின் பங்களிப்பை யாராலும் மறந்துவிட முடியாது. தனது சர்வதேச போட்டிகளில் 58 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். 41.95 சராசரியுடன் 4154 ரன்கள் எடுத்தார். இதில் 9 சதங்களும் அடங்கும். கம்பீர் 147 ஒருநாள் போட்டிகளில் 39.68 சராசரியுடன் 5238 ரன்கள் எடுத்தார். 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அந்த மறக்கமுடியாத இன்னிங்ஸில் 97 ரன்கள் எடுத்து இந்தியா இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வெல்ல உதவினார். ஒருநாள் போட்டிகளில் 11 சதங்கள் அடித்துள்ளார். டி20 போட்டிகளிலும் கம்பீர் தனது முத்திரையை பதித்து 37 போட்டிகளில் 7 அரைசதங்களுடன் 932 ரன்கள் எடுத்தார்.
இந்திய ஜாம்பவான்களில் ராகுல் டிராவிட்டும் ஒருவர். 2012 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது மோசமான ஆட்டத்திற்குப் பிறகு ராகுல் டிராவிட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களுக்கு மேல் எடுத்த இந்திய வீரர்கள் இருவர் மட்டுமே. ஒருவர் சச்சின் டெண்டுல்கர்.. இரண்டாவது நபர் டிராவிட். ராகுல் டிராவிட் டெஸ்டில் 13,288 ரன்கள் எடுத்தார், இதில் 36 சதங்களும் 63 அரைசதங்களும் அடங்கும். டெஸ்ட் போட்டிகளில் ராகுல் டிராவிட் இந்திய அணியின் தடுப்புச்சுவர் என்றே செல்லமாக அழைக்கப்பட்டார். டிராவிட் ஒருநாள் போட்டிகளில் 10,889 ரன்கள் எடுத்தார். இதில் 12 சதங்களும் அடங்கும். ஒரு பீல்டராக அதிக கேட்ச்களை பிடித்த வீரர் என்ற உலக சாதனையை டிராவிட் படைத்துள்ளார். 301 இன்னிங்ஸ்களில் 210 கேட்ச்களைப் பிடித்துள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற டிராவிட்.. பயிற்சியாளராக முன்னேறி வருகிறார். இருப்பினும், டிராவிட்டுக்கு விடைபெறும் போட்டியின் மரியாதை கிடைக்கவில்லை.
இந்திய அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஜாகிர் கான் முக்கியமானவராக கருதப்பட்டார். 2017 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார், ஆனால் அவருக்கு விடைபெறும் போட்டியின் மரியாதை கிடைக்கவில்லை. இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஜாகிர் கான் நீண்ட காலமாக இந்திய வேகப்பந்து வீச்சு தாக்குதலின் தூணாக இருந்தார். காயம் காரணமாக அவர் அணியில் இருந்து வெளியேறினார். ஜாகிர் தனது கடைசி டெஸ்ட் போட்டியை பிப்ரவரி 2014 இல் நியூசிலாந்துக்கு எதிராகவும், அவரது கடைசி ஒருநாள் போட்டியை ஆகஸ்ட் 2012 இல் பல்லேகலேவில் இலங்கைக்கு எதிராகவும் விளையாடினார். இந்தியாவுக்காக ஜாகிர் கான் 92 டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 311 விக்கெட்டுகளை வீழ்த்தினார், சாகிர் 200 ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 282 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது தவிர 17 டி20 போட்டிகளில் 17 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக சாகிர் 600க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.