ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சிஎஸ்கே, கேகேஆர், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் நன்றாக ஆடி வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்திவருகின்றன.
ஆர்சிபி, சன்ரைசர்ஸ் அணிகள் சுமாராக ஆடிவருகின்றன. பஞ்சாப் கிங்ஸ் அணி நன்றாக ஆடிவருகிறது. டெல்லி கேபிடள்ஸ் அணி ஆடிய முதல் 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, கடந்த சீசனில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து வெளியேறிய நிலையில், இந்த சீசனில் முதல் 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவியது.
இன்று டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியில் இந்த சீசனில் முதல் வெற்றியை பெறும் முனைப்பில் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்குகிறது. ஜஸ்ப்ரித் பும்ரா காயத்தால் இந்த சீசனில் ஆடாதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. ஆனால் பேட்டிங்கிலும் மும்பை அணி சரியாக செயல்படாததால் தான் படுதோல்விகளை சந்தித்துவருகிறது.
இந்நிலையில், கடந்த சீசனிலிருந்து மும்பை இந்தியன்ஸின் பெரிய பிரச்னையே பேட்டிங்கில் பார்ட்னர்ஷிப் அமைக்காததுதான். ஒரு பெரிய பார்ட்னர்ஷிப் கூட அமையவில்லை என்றால், பெரிய ஸ்கோர் கண்டிப்பாக வராது. அந்த விஷயத்தில் தான் மும்பை அணி கோட்டைவிடுகிறது. மும்பை வீரர்கள் இன்னிங்ஸை கட்டமைக்க வேண்டும். ரோஹித்தும் இஷானும் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுக்க தவறுகிறார்கள் என்றார் கவாஸ்கர்.