மீண்டும் கேப்டனாகும் ரோகித்..
ஐபிஎல் 2027 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா மீண்டும் பொறுப்பேற்கிறாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. அந்த அணியின் மர்மமான சமூக வலைதளப் பதிவு, கேப்டன்சி மாற்றம் குறித்த விவாதத்தை மீண்டும் சூடுபிடிக்கச் செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியான மும்பை இந்தியன்ஸ், தனது அடுத்த சீசனுக்கான கேப்டன் யார் என்பதை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில், புதன்கிழமை அந்த அணி வெளியிட்ட ஒரு புகைப்படம் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மர்மப் பதிவால் வெடித்த கேப்டன்சி விவாதம்!
மும்பை இந்தியன்ஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில், அனிமேஷன் வடிவிலான ஒரு கை அந்த அணியின் தொப்பியைப் பிடித்திருப்பது போன்ற புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளது. இந்தப் பதிவுக்கு எந்தவிதமான விளக்கத்தையும் அந்த அணி வழங்கவில்லை.
ஆனால், இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இது ரோஹித் சர்மாவின் கேப்டன்சி மீண்டும் திரும்புவதற்கான முன்னோட்டமாக இருக்கலாம் என்று கணிக்கத் தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக, 2024 டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றபோது ரோஹித் சர்மா தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்து கொண்டாடிய தருணத்துடன் இந்தப் புகைப்படத்தை சில ரசிகர்கள் ஒப்பிட்டுள்ளனர்.
அதேபோல், 2013-ம் ஆண்டு முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ் அணிக்குக் கேப்டனாகப் பொறுப்பேற்ற ரோஹித், அந்த அணிக்கு முதல் ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்தபோது கொண்டாடிய தருணத்தையும் ரசிகர்கள் நினைவுகூர்ந்துள்ளனர்.