
டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான 40ஆவது லீக் போட்டி தற்போது அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற குஜராத் கேப்டன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி டெல்லி முதலில் பேட்டிங் செய்து 224 ரன்கள் குவித்தது.
டெல்லி அணியில் பிரித்வி ஷா மற்றும் ஜாக் பிரேசர் மெக்கர்க் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், மெக்கர்க் 14 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 23 ரன்களில் ஆட்டமிழந்தார். இதே போன்று பிரித்வி ஷாவும் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். மெக்கர்க் மற்றும் ஷா இருவரும் சந்தீப் வாரியர் வீசிய 3.2 மற்றும் 3.5ஆவது பந்துகளில் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த ஷாய் ஹோப் 5 ரன்களில் வெளியேறினார். இதன் மூலமாக பவர்பிளேயில் 3 விக்கெட்டுகளை இழந்து டெல்லி தடுமாறியது. அதன் பிறகு அக்ஷர் படேல் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்க தொடங்கினர். 7 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 49 ரன்கள் எடுத்திருந்த டெல்லி அடுத்த 3 ஓவர்களில் 31 ரன்கள் எடுத்து 10 ஓவர்களில் 80 ரன்கள் எடுத்தது.
அதன் பிறகு ஒரு சில ஓவர்களைத் தவிர ஒவ்வொரு ஓவரிலும் 10 ரன்களுக்கு மேல் ரன்கள் சேர்த்தது. அக்ஷர் படேல் 37 பந்துகளில் அரைசதம் அடித்தார். நூர் அகமது வீசிய 17ஆவது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்கள் பறக்கவிட்ட நிலையில் ஹாட்ரிக் சிக்ஸருக்கு முயற்சித்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர், 43 பந்துகளில் 5 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து டிரிஸ்டன் ஸ்டப்ஸ் களமிறங்கினார். ஸ்டப்ஸ் தன் பங்கிற்கு அதிரடி காட்ட பண்ட் 33 பந்துகளில் அரைசதம் அடித்தார். 19ஆவது ஓவரை எதிர்கொண்ட ஸ்டப்ஸ் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் பறக்கவிட்டார். இதே போன்று மோகித் சர்மா வீசிய போட்டியின் கடைசி ஓவரை எதிர்கொண்ட பண்ட் 6, 4, 6, 6, 6 என்று 31 ரன்கள் குவித்தார்.
இதன் மூலமாக ரிஷப் பண்ட் 43 பந்துகளில் 5 பவுண்டரி, 8 சிக்ஸர் உள்பட 88 ரன்களுடனும், ஸ்டப்ஸ் 7 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 26 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியாக டெல்லி கேபிடல்ஸ் 4 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் குவித்தது.
முதல் 10 ஓவர்களில் 80 ரன்கள் எடுத்திருந்த டெல்லி கேபிடல்ஸ் கடைசி 10 ஓவர்களில் 144 ரன்கள் குவித்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் சந்தீப் வாரியர் 3 ஓவர்கள் வீசி 15 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். நூர் அகமது ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இந்த சீசனில் அதிக ரன்களை வாரி குவித்தவர்களின் பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் பவுலர் மோகித் சர்மா 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 73 ரன்கள் கொடுத்து முதலிடம் பிடித்துள்ளார்.
இந்தப் போட்டியில் கேப்டன் ரிஷப் பண்ட் 50 ரன்களுக்கு மேல் எடுத்ததன் மூலமாக அதிக முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் 19ஆவது முறை எடுத்து 2ஆவது இடம் பிடித்துள்ளார். டேவிட் வார்னர் 24 முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்து முதலிடத்தில் இருக்கிறார். ஷிகர் தவான் 18 முறையும், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் வீரேந்தர் சேவாக் தலா 16 முறையும் எடுத்துள்ளனர்.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 200 ரன்களுக்கு மேல் எடுத்த அணிகளின் பட்டியலில் 224 ரன்கள் குவித்து டெல்லி கேபிடல்ஸ் முதலிடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் 218, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 207, சென்னை சூப்பர் கிங்ஸ் 206, பஞ்சாப் கிங்ஸ் 200 ரன்களும் குவித்து அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.