
சொந்த மண்ணில் ஆர்சிபிக்கு 45ஆவது தோல்வி
Top 5 IPL Teams Most Defeats at a Venue in Tamil : ஐபிஎல் 2025 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 2ஆவது முறையாக ஹோம் மைதானத்தில் விளையாடியது. எம் சின்னச்சாமி மைதானத்தில், விளையாடிய 2 போட்டியிலும் ஆர்சிபி தோல்வி அடைந்துள்ளது. இன்று நடந்த டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக சொந்த மைதானத்தில் ஆர்சிபி 45 முறை தோல்வியை தழுவியது. இதன் காரணமாக சொந்த மைதானத்தில் அதிக முறை தோல்வி அடைந்த அணி என்ற மோசமான சாதனையை ஆர்சிபி படைத்துள்ளது.
டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ்
டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025 தொடரின் 24ஆவது லீக் போட்டி சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் (Delhi Capitals) அணியின் கேப்டன் அக்ஷர் படேல் (Axar Patel) ஆர்சிபி அணியை முதலில் பேட் செய்ய அழைத்தார். அதன்படி முதலில் விளையாடிய ஆர்சிபி 3 ஓவர்களில் 53 ரன்கள் குவித்திருந்தது. 4 ஓவர்களில் 62/1 ரன்கள் எடுத்திருந்த ஆர்சி அதன் பிறகு முதல் பவர்பிளேயில் 64/2 என்ற நிலைக்கு வந்தது.
முதல் 10 ஓவர்களில் 84/3 ரன்கள் எடுத்த ஆர்சிபி அடுத்த 10 ஓவர்களில் 79/4 ரன்கள் எடுத்திருந்தது. கடைசியில் டிம் டேவிட் அதிரடியாக விளையாடி 20 பந்துகளில் 4 சிக்ஸர், 2 பவுண்டரி உள்பட 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பில் சால்ட் 17 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரி உள்பட 37 ரன்கள் எடுத்து ரன் அவுட் செய்யப்பட்டார். கேப்டன் ரஜத் படிதார் 25 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். இறுதியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் குவித்தது.
ஆரம்பத்தில் சிறப்பாக தொடங்கிய ஆர்சிக்கு மிடில் ஆர்டரில் போதுமான ரன்கள் எடுக்கப்படவில்லை. டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் குல்தீப் யாதவ் (2/17) மற்றும் விப்ராஜ் நிகம் (2/18) ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். முகேஷ் குமார் (1/26) ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். அக்ஸர் படேல் மற்றும் மிட்செல் ஸ்டார்க் விக்கெட் எடுக்கவில்லை.
சுருக்கமான ஸ்கோர்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 163/7 (பில் சால்ட் 37, டிம் டேவிட் 37*; குல்தீப் யாதவ் 2/17) vs டெல்லி கேப்பிடல்ஸ்.
டெல்லிக்கு 164 ரன்கள் இலக்கு
பின்னர் 164 ரன்களை துரத்திய டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அடுத்தடுத்த ஓவர்களில் ஃபாப் டூப்ளெசிஸ் (2), ஜாக் பிரேஸர் மெக்கர்க் (7) சொற்ப ரன்களுக்கு யாஷ் தயாள் மற்றும் புவனேஷ்வர் குமார் ஓவர்களில் ஆட்டமிழந்தனர். அபிஷேக் போரெலும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. அவர் புவனேஷ்வர் குமார் ஓவரில் 7 ரன்களுக்கு நடையை கட்டினார். மெக்கர்க் மற்றும் போரெல் இருவரது கேட்சுகளை விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் சர்மா அபாரமாக பிடித்தார்.
கேஎல் ராகுல் சிறப்பான பேட்டிங்
கேப்டன் அக்ஷர் படேல் தன் பங்கிற்கு 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன் பிறகு கேஎல் ராகுல் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இருவரும் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதில் கேஎல் ராகுல் 37 பந்துகளில் அரைசதம் கடந்தார். மழை தூரலும் விழுந்தது. எனினும் போட்டி தொடர்ந்தது. கடைசியில் அதிரடியாக விளையாடிய ராகுல் அடுத்த 16 பந்துகளில் 43 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 38 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
டெல்லி கேபிடல்ஸ் வெற்றி
இறுதியாக டெல்லி கேபிடல்ஸ் 17.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக டெல்லி கேபிடல்ஸ் விளையாடிய 4 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. ஆர்சிபி 5 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி 2 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது.
சொந்த மண்ணில் 2ஆவது தோல்வி
இதற்கு முன்னதாக இதே மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபி தோற்றது. இந்த சீசனில் 2ஆவது முறையாக ஹோம் மைதானத்தில் ஆர்சிபி தோல்வியை சொந்தமாக்கியது.
மோசமான சாதனை படைத்த ஆர்சிபி
இதுவரையில் இந்த மைதானத்தில் 45 முறை ஆர்சிபி தோற்று அதிக முறை ஒரே மைதானத்தில் தோல்வி அடைந்த அணி என்ற மோசமான சாதனையை ஆர்சிபி படைத்துள்ளது. இந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு வித்திட்ட கேஎல் ராகுல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
ஆர்சிபிக்கு அடுத்து 2ஆவது இடத்தில் டெல்லி கேபிடல்ஸ் (44 தோல்வி) உள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 38 தோல்விகளுடன் 3ஆவது இடத்தில் உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் 34 தோல்விகளுடன் 4ஆவது இடத்தில் உள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் 30 தோல்விகளுடன் 5ஆவது இடத்தில் உள்ளது
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
வரும் 13 ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெறும் 28ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதே போன்று அதே நாளில் டெல்லி கேபிடல்ஸ் அணியானது தனது சொந்த மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.