ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் சிஎஸ்கே, குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் அபாரமாக ஆடி வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி ஜஸ்ப்ரித் பும்ரா இல்லாமல் திணறிவருகிறது. இந்த சீசனின் முதல் 2 போட்டிகளில் தோற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, அடுத்த 3 போட்டிகளிலும் தொடர்ச்சியாக ஹாட்ரிக் வெற்றி பெற்றது. ஆனால் அடுத்த 2 போட்டிகளில் மீண்டும் தோல்வியை தழுவியது.
பும்ராவின் இழப்பை ஆர்ச்சரை வைத்து ஈடுகட்ட நினைத்தது மும்பை இந்தியன்ஸ் அணி. ஆனால் அவரால் அனைத்து போட்டிகளிலும் ஆட முடியவில்லை. அவருக்கு இடையிடையே ஓய்வளிக்கப்படுகிறது. அவர் ஆடும் போட்டிகளிலும் அவரால் பழைய மாதிரி 150 கிமீ வேகத்தில் எல்லாம் வீச முடியவில்லை. ஜேசன் பெஹ்ரண்டார்ஃப், ரைலீ மெரிடித் அவர்கள் வேலையை ஓரளவிற்கு செய்கின்றனர். இவர்களுடன் அர்ஜுன் டெண்டுல்கரும் ஓரளவிற்கு நன்றாக வீசிவருகிறார். ஆனால் ஆட்டத்தையே மாற்றக்கூடிய மேட்ச் வின்னிங் பவுலிங் பெர்ஃபாமன்ஸை யாருமே கொடுப்பதில்லை.
இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் இங்கிலாந்தின் ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் கிறிஸ் ஜோர்டான் மும்பை அணியில் இணைந்து, மும்பை வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார். ஆனால் அவர் யாருக்கு மாற்று வீரராக எடுக்கப்பட்டிருக்கிறார் என்பது உறுதியாக தெரியவில்லை. இந்த சீசனிலிருந்து விலகிய ஜெய் ரிச்சர்ட்ஸனுக்கு பதிலாக எடுக்கப்பட்டிருக்கலாம்.
கிறிஸ் ஜோர்டான் இணைவு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பலம் சேர்க்கும். அணியின் பேலன்ஸை வலுப்படுத்தும். ஃபாஸ்ட் பவுலரான கிறிஸ் ஜோர்டான் பேட்டிங்கும் ஆடக்கூடியவர். நல்ல வேரியேஷனில் பந்துவீசுவார். 87 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடியுள்ள ஜோர்டான் 96 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐபிஎல்லில் 28 போட்டிகளில் ஆடி 27 விக்கெட் வீழ்த்தியுள்ளார்; 75 ரன்களும் அடித்துள்ளார்.