டெல்லி கேபிடல்ஸை 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
DC vs MI IPL 2025 : ஐபிஎல் 2025-க்கான 29-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த சீசனில் டெல்லி அணி சந்தித்த முதல் தோல்வி இது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 205 ரன்கள் குவித்தது. 206 ரன்கள் இலக்கை துரத்திய டெல்லி அணி 19 ஓவர்களில் 193 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
மும்பை அணி புள்ளி பட்டியலில் 7ஆவது இடத்திற்கு முன்னேற்றம்
இந்த பரபரப்பான வெற்றியின் மூலம் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி, புள்ளிகள் பட்டியலில் 7ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங்கில் அதிரடி காட்டியது, பின்னர் பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங்கிலும் அசத்தியது. திலக் மற்றும் நமனின் அதிரடி ஆட்டம் MI அணியை பெரிய ஸ்கோரை எட்ட உதவியது.
மும்பை அணி 205 ரன்கள்
டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் ஸ்கோர்கார்டை பார்த்தால், டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தார். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா மற்றும் ரியான் ரிகல்டன் நல்ல தொடக்கம் கொடுத்தனர்.
இருப்பினும், ரோகித் 12 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ரியான் ரிகல்டன் 25 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட 41 ரன்கள் எடுத்தார். சூர்யகுமார் யாதவும் 28 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். இதில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். திலக் வர்மா 33 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட 59 ரன்கள் எடுத்தார். நமன் திர் 17 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். டெல்லி அணியின் பந்துவீச்சில் விப்ராஜ் நிகம் மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர், முகேஷ் குமார் 1 விக்கெட் எடுத்தார்.
கருண் நாயரின் அதிரடி ஆட்டம்;
206 ரன்கள் இலக்கை துரத்திய டெல்லி கேபிடல்ஸ் அணி 19 ஓவர்களில் 193 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 19வது ஓவரில் 3 பேட்ஸ்மேன்கள் ரன் அவுட் ஆனார்கள். இது தான் போட்டியில் திருப்பு முனையை ஏற்படுத்தி மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு வித்திட்டது. டெல்லி கேபிடல்ஸ் வெற்றிக்கு 12 பந்துகளில் 23 ரன்கள் தேவைப்பட்டது. போட்டியின் 18ஆவது ஓவரை ஜஸ்ப்ரித் பும்ரா வீசினார். மிட்செல் ஸ்டார்க் மற்றும் அஷுதோஷ் சர்மா இருவரும் களத்தில் இருந்தனர்.
அஷுதோஷ் சர்மா ரன் அவுட் - ஒரே ஓவரில் 3 ரன் அவுட்
இந்த ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரி அடித்த அஷுதோஷ் சர்மா 4ஆவது பந்தில் 2 ரன்கள் எடுக்க ஓடிய போது ரன் அவுட்டானார். இதே போன்று 5ஆவது பந்தில் குல்தீப் யாதவ் 2 ரன்கள் எடுக்க ஓடிய போது ரன் அவுட் செய்யப்பட்டார். கடைசி பந்திற்கு வந்த மோகித் சர்மாவும் ரன் அவுட்டில் ஆட்டமிழந்தார். இதன் மூலமாக டெல்லி கேபிடல்ஸ் 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 193 ரன்கள் எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
சொதப்பிய டெல்லி கேபிடல்ஸ் பேட்ஸ்மேன்
பேட்டிங்கில் கருண் நாயர் அதிக ரன்கள் எடுத்தார். ஐபிஎல் 2025-ல் தனது முதல் போட்டியில் விளையாடிய கருண் நாயர் 40 பந்துகளில் 89 ரன்கள் குவித்தார். இதில் 12 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தவிர, அபிஷேக் போரல் 25 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார்.
அதன் பிறகு எந்த பேட்ஸ்மேனும் நிலைத்து நிற்கவில்லை. கே.எல்.ராகுல் 15, அஷுதோஷ் சர்மா 17, விப்ராஜ் நிகம் 14, அக்சர் படேல் 9, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 1, மிட்செல் ஸ்டார்க் 1 மற்றும் குல்தீப் யாதவ் 1 ரன் எடுத்தனர். ஜாக் ஃப்ரேசர் மெக்கர்க் டக் அவுட் ஆனார். அவர் முதல் பந்திலேயே தீபக் சாஹரிடம் விக்கெட்டை இழந்தார். மும்பை அணியின் பந்துவீச்சில் கரண் சர்மா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மிட்செல் சான்ட்னர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜஸ்பிரித் பும்ரா மற்றும் தீபக் சாஹர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
டெல்லி கேபிடல்ஸ் முதல் முறையாக தோல்வி
இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக டெல்லி கேபிடல்ஸ் முதல் முறையாக தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த சீசனில் டெல்லியை தோற்கடித்த முதல் கேப்டன் என்ற சாதனையை ஹர்திக் பாண்டியா படைத்துள்ளார். இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.