
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 34ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்து 176 ரன்கள் குவித்தது.
ரச்சின் ரவீந்திரா மற்றும் அஜிங்க்யா ரஹானே இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் ரச்சின் ரவீந்திரா கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 17 ரன்களில் வெளியேறினார். அஜிங்க்யா ரஹானேவும் 24 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 36 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஷிவம் துபே 3, சமீர் ரிஸ்வி 1 என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். நம்பர் 4ல் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜாவுடன், மொயீன் அலி இணைந்தார். இருவரும் நிதானமாக ஒவ்வொரு ரன்னாக எடுத்தனர். 15 ஓவர்களில் சிஎஸ்கே 5 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் எடுத்தது. அடுத்த 2 ஓவர்களில் 18 ரன்கள் எடுக்கப்பட்டு மொத்தமாக 123 ரன்கள் எடுத்திருந்தது.
அப்போது தான் 18ஆவது ஓவர் வீசுவதற்கு ரவி பிஷ்னோய் வந்தார். இதில், மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர்கள் பறக்கவிட்டார். அதுவரையில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் கூட அடிக்காத மொயீன் அலி, பிஷ்னோய் ஓவரை வச்சு செய்து, அதே ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 21 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்த ஓவர் தான் போட்டியில் திருப்பு முனையை ஏற்படுத்தியது.
அடுத்து தோனி களமிறங்கினர். இதுவரையில் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையில் அடிக்காத ஒரு ஷாட்டை இந்தப் போட்டியில் அவர் அடித்தார். மோசின் கான் வீசிய 19ஆவது ஓவரில் நகர்ந்து வந்து ஸ்கூப் ஷாட்டில் விக்கெட் கீப்பரின் தலைக்கு மேலாக சிக்ஸருக்கு விரட்டினார். அந்த ஓவரில் மட்டும் 2 வைடு, 4, 6, 1, 0, 1, வைடு, 0 என்று மொத்தமாக 15 ரன்கள் எடுக்கப்பட்டது.
கடைசி ஓவரை யாஷ் தாக்கூர் வீசினார். அந்த ஓவரில் தோனி 3ஆவது பந்தில் சிக்ஸரும், 4ஆவது பந்தில் பவுண்டரியும், கடைசி பந்தில் பவுண்டரியும் விளாசவே சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்தது.
இதில், தோனி 9 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதே போன்று ரவீந்திர ஜடேஜா 40 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பின்னர் கடின இலக்கை துரத்திய கேஎல் ராகுல் மற்றும் குயீண்ட டி காக் இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இந்த ஜோடியை பிரிக்க சிஎஸ்கே மேற்கொண்ட எல்லா பிளானும் வீணானது. கடைசியாக முஷ்தாபிஜூர் ரஹ்மான் இந்த ஜோடியை பிரித்தார்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 134 ரன்கள் குவித்தது. இதில், குயீண்டன் டி காக் 54 ரன்கள் எடுத்துக் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து கேப்டன் கேஎல் ராகுல் 53 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு நிக்கோலஸ் பூரன் மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் இருவரும் இணைந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இறுதியாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 19ஆவது ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்தப் போட்டியில் கேஎல் ராகுல் அரைசதம் அடித்ததன் மூலமாக ஒரு விக்கெட் கீப்பராக தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். தோனி ஒரு விக்கெட் கீப்பராக ஐபிஎல் கிரிக்கெட்டில் 24 அரைசதங்கள் அடித்திருந்த நிலையில், இந்த சாதனையை கேஎல் ராகுல் முறியடித்துள்ளார். இந்தப் பட்டியலில் ஆர்சிபி விக்கெட் கீப்பர் 23 அரைசதங்கள் உடன் 3ஆவது இடத்தில் இருக்கிறார்.