
IPL 2025 Mega Auction Date and Time : ஐபிஎல் ஏலம் முன்பு வெளிநாட்டில் நடந்தது. ஆனால் இதுவே முதல் முதலாக சவுதி அரேபியாவில் இந்த ஏலம் நடைபெற உள்ளது. ஐபிஎல்-இன் 10 அணிகளின் உரிமையாளர்கள் மற்றும் பிசிசிஐ அதிகாரிகள் சவுதி அரேபியாவிற்கு வந்துள்ளனர். விராட் கோலி, ரோகித் சர்மா, எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, சூர்யகுமார் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோரைத் தவிர மற்ற முக்கியமான வீரர்களான கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், இஷான் கிஷன், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் எந்த அணியில் இடம் பெற்று விளையாடுவார்கள் என்ற எதிர்பார்ப்புக்கு இன்று விடை கிடைக்க இருக்கிறது.
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த காத்திருந்த அந்த நாள் வந்துவிட்டது. 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் ஐபிஎல் 2025 மெகா ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் 577 கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கின்றனர். இவர்களில் 210 பேர் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள். 367 பேர் இந்திய கிரிக்கெட் வீரர்கள். 10 அணிகளில் மொத்தம் 204 கிரிக்கெட் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்க உள்ளது.
இவர்களில் 70 பேர் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் இடம் பெறுவார்கள். இந்த ஐபிஎல் மெகா ஏலத்திற்கு ஆரம்பத்தில் 1,574 கிரிக்கெட் வீரர்கள் பதிவு செய்தனர். இவர்களில் இறுதியில் 577 கிரிக்கெட் வீரர்கள் ஏலத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரபல கிரிக்கெட் வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கின்றனர். டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வந்த ரிஷப் பண்ட் எந்த அணியில் இடம் பெற்று விளையாடுவார் என்ற எதிர்பார்த்து அதிகரித்துள்ளது. இதே போன்று லக்னோ அணிக்காக விளையாடி வந்த கேஎல் ராகுல் எந்த அணிக்கு திரும்புவார் என்ற எதிர்பார்க்கும் ஏற்பட்டுள்ளது.
எப்போது, எப்படி ஐபிஎல் 2025 மெகா ஏலத்தைப் பார்க்கலாம்?
இன்று ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி பிற்பகல் 3:30 மணிக்கு ஐபிஎல் 2025 மெகா ஏலம் தொடங்க உள்ளது. முதலில் மார்க்கி செட்டில் உள்ள கிரிக்கெட் வீரர்களின் ஏலம் நடைபெறும். இந்த பகுதி மாலை 5 மணி வரை நடைபெறும். அதன் பிறகு 45 நிமிட இடைவேளை இருக்கும். பின்னர் மாலை 5:45 மணிக்கு மீண்டும் ஏலம் தொடங்கும். இந்த பகுதி இரவு 10:30 மணி வரை நடைபெறும்.
இதைத் தொடர்ந்து மீண்டும் நாளை திங்கள்கிழமையும் இந்திய நேரப்படி பிற்பகல் 3:30 மணிக்கு ஏலம் தொடங்கும். ஐபிஎல் ஏலத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தொலைக்காட்சியில் நேரடியாக பார்க்கலாம். நேரடி ஸ்ட்ரீமிங்கை சோனி லிவ் மற்றும் ஜியோ சினிமா செயலியில் பார்க்கலாம்.
எந்த அணியிடம் எவ்வளவு பணம் உள்ளது?
ஐபிஎல் 2025 மெகா ஏலம் தொடங்குவதற்கு முன், பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் தான் அதிக பர்ஸ் தொகை உள்ளது.
ரூ.120 கோடியில் ஏலத்திற்கு கையில் வைத்திருக்கும் பர்ஸ் தொகை:
பஞ்சாப் கிங்ஸ் - ரூ. 110.5 கோடி
ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ. 41 கோடி
சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ. 55 கோடி
டெல்லி கேப்பிடல்ஸ் - ரூ. 73 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ. 51 கோடி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 83 கோடி
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ரூ. 69 கோடி
மும்பை இந்தியன்ஸ் – ரூ. 45 கோடி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ரூ. 45 கோடி
குஜராத் டைட்டன்ஸ் – ரூ. 69 கோடி
ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் இந்தியா-ஆஸ்திரேலியா தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் ஐபிஎல் 2025 மெகா ஏலம் நடைபெற உள்ளது. இந்தப் போட்டி முடிந்த பிறகு ஐபிஎல் ஏலம் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.