
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஸ்டார் ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் அவருடைய 14 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் பயணம் நிறைவுக்கு வந்துள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதன்முதலாகக் களமிறங்கிய இவர், தற்போது தனது 38-வது வயதில் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
20 மற்றும் 50 ஓவர்கள் கொண்ட போட்டிகளில் அதிரடி காட்டிய மேக்ஸ்வெல், டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இவர் அறிமுகமானார். 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக்கோப்பையில் (ICC Men's T20 World Cup 2026) ஓமன் அணிக்கு எதிராக ஆஸ்திரேலியாவுக்காக அவர் தனது கடைசிப் போட்டியில் விளையாடினார்.
அந்தப் போட்டியில் பந்துவீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்திய போதிலும், அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. அதுவே ஆஸ்திரேலிய அணிக்காக மேக்ஸ்வெல் விளையாடிய கடைசி சர்வதேசப் போட்டியாக அமைந்தது.
ஆஸ்திரேலியாவுக்காக 149 ஒருநாள் போட்டிகள், 130 டி20 போட்டிகள் மற்றும் 7 டெஸ்ட் போட்டிகளில் மேக்ஸ்வெல் விளையாடியுள்ளார். 2015 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளின் ஒருநாள் உலகக்கோப்பை, 2021-ஆம் ஆண்டின் டி20 உலகக்கோப்பை என மூன்று ஐசிசி கோப்பைகளை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இவர் இடம்பெற்றிருந்தார்.
தனிநபராக அதிரடியாக விளையாடி போட்டியின் போக்கையே மாற்றக்கூடிய திறமை படைத்த இவர், 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆஸ்திரேலியாவின் வொயிட் பாஅல் கிரிக்கெட்டில் மிக முக்கியமான வீரராகத் திகழ்ந்தார். 2023-ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இவர் அடித்த இரட்டைச் சதம், இவரது வாழ்க்கையில் மிகச் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். அணியின் இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கி, ஆட்டமிழக்காமல் 201* (200) ரன்கள் குவித்து ஆஸ்திரேலியாவிற்கு ஒரு பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுத் தந்தார்.
உலகக்கோப்பை வரலாற்றிலேயே சிறந்த தனிநபர் இன்னிங்ஸாக அந்த ஆட்டம் பார்க்கப்படுகிறது. அவரின் போராடும் குணம், திறமை மற்றும் மீண்டு வரும் ஆற்றலுக்கு அந்தப் போட்டி ஒரு சிறந்த உதாரணமாகும்.
ஒருநாள் போட்டிகளில் 126.7 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் 3,990 ரன்களும், டி20 போட்டிகளில் 154.4 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் 2,897 ரன்களும் குவித்துள்ளார். மூன்று வடிவங்களையும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் 10 சதங்களையும், 136 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டிலும் விளையாடியுள்ள மேக்ஸ்வெல், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ஆர்சிபி அணிக்காக களமிறங்கி அசத்தியுள்ளார்.
இதற்கு முன்னதாக, 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து மேக்ஸ்வெல் ஓய்வு பெற்றார். எனினும், டி20 அணியில் தொடர்ந்து விளையாடி வந்த அவர், டி20 உலகக்கோப்பையிலும் ஆஸ்திரேலியாவுக்காகப் பங்கேற்றார். இருப்பினும், அந்தத் தொடரில் ஆஸ்திரேலிய அணி குரூப் சுற்றைத் தாண்டவில்லை. ஓமன் அணிக்கு எதிரான போட்டியோடு தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை மேக்ஸ்வெல் முடித்துக் கொண்டுள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட வினி ராமன் (Vini Raman) என்பவரை மேக்ஸ்வெல் காதல் திருமணம் செய்துகொண்டார். மெல்போர்னில் மருந்தாளுநராக (Pharmacist) பணியாற்றிய வினி ராமனை 2022-ஆம் ஆண்டு தமிழ் பாரம்பரிய முறைப்படியும், இந்து கலாச்சார சடங்குகளுடனும் மேக்ஸ்வெல் கரம்பிடித்தார்.
தமிழ்நாட்டு பெண்ணை மணந்ததன் மூலம் தமிழக ரசிகர்களின் மனதிற்கு நெருக்கமானவராக மாறிய மேக்ஸ்வெல்லை, இந்திய மற்றும் தமிழக ரசிகர்கள் அன்போடு "தமிழ்நாட்டு மருமகன்" என்று அழைத்து மகிழ்கின்றனர். கிளென் மேக்ஸ்வெல் - வினி ராமன் தம்பதியருக்கு ஒரு குழந்தை உள்ளது. கிரிக்கெட்டுக்கு குட்பை சொன்ன மேக்ஸ்வெல் அதிரடி பேட்டிங், நம்ப முடியாத போட்டி வெற்றிகள் மற்றும் பன்முகத் திறமையால் கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் இவர் என்றென்றும் நீங்காத இடம் பிடித்திருப்பார்.