
சாம்பியன்ஸ் டிராபி 2025 - இந்திய அணி
Champions Trophy 2025 : வரும் 2025ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபிக்காக கிரிக்கெட் உலகம் ஆவலுடன் காத்திருக்கிறது. இந்தப் போட்டியில் மூன்றாவது பட்டத்தை வெல்லும் முனைப்புடன் இந்திய கிரிக்கெட் அணி உட்பட அனைத்து கிரிக்கெட் நாடுகளும் தங்கள் வேலைகளை தொடங்கியுள்ளன.
உலகக் கோப்பை 2023க்குப் பிறகு இந்திய அணி அதிக போட்டிகளில் விளையாடவில்லை, எனவே அணி முன்பு போலவே இருக்கலாம் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், சில முக்கிய வீரர்கள் இந்தப் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை இழக்க நேரிடும்.
சாம்பியன்ஸ் டிராபி 2025- ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி
ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட உள்ளார். சாம்பியன்ஸ் டிராபி 2025ல் இந்திய கிரிக்கெட் அணிக்கு மீண்டும் தலைமை தாங்க ரோகித் சர்மா தயாராக உள்ளார். அவர் டி20 உலகக் கோப்பையை வழங்கினார். மேலும், ஒருநாள் உலகக் கோப்பை 2023ல் இந்திய அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.
அவருடன் சீனியர் நட்சத்திர வீரர் விராட் கோலி நிச்சயம் அணியில் இடம் பெறுவார். தற்போது ஃபார்முக்கு திரும்பியுள்ள கோலி அதே ஆட்டத்தைத் தொடர இலக்கு வைத்துள்ளார். ரோகித் சர்மாவுடன் புதிய வீரர்கள் அணிக்குள் வர வாய்ப்புள்ளது. திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர், சஞ்சு சாம்சன், ஹர்ஷித் ராணா போன்ற பல புதிய வீரர்களை சாம்பியன்ஸ் டிராபி அணியில் சேர்க்கலாம்.
கே.எல். ராகுல், ஷ்ரேயாஸ் ஐயருக்கு இடம் கிடைக்காமல் போகலாம்
இந்திய நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல். ராகுல், மற்றொரு பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக மிகவும் வலுவான இன்னிங்ஸ்களை ஆடினர். இருப்பினும், இதற்குப் பிறகு ஐயர் இந்திய ஒருநாள் அணியில் இருந்து வெளியேறினார்.
கே.எல். ராகுலைப் பொறுத்தவரை, புதிய வீரர்களிடமிருந்து கடும் போட்டியை எதிர்கொள்கிறார். புதிய வீரர்களுடன் ரிஷப் பண்டும் இருப்பதால் கே.எல். ராகுலுக்கு இறுதி அணியில் இடம் கிடைக்காமல் போகலாம் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முகமது ஷமி திரும்பி வருவாரா?
முகமது ஷமி மீண்டும் இந்திய ஒருநாள் அணியில் இடம் பெறலாம். ஷமி ஒருநாள் உலகக் கோப்பை 2023 முதல் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை, ஆனால் சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு, அணி அவருக்கு போட்டி பயிற்சியை வழங்க முடியும். இந்திய அணியில் அவர் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக இருக்கலாம். கடந்த ஒருநாள் உலகக் கோப்பை 2023ல் இந்தியாவுக்காக அற்புதமான பந்துவீச்சு மூலம் கவர்ந்தார்.
போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளராகவும் ஆனார். தற்போது காயத்தில் இருந்து மீண்டுள்ள ஷமி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் மீண்டும் இந்திய அணிக்காக களமிறங்க வாய்ப்புள்ளது. அவருடன் ஜஸ்பிரித் பும்ராவும் அணியில் இடம் பெற உள்ளார். இந்த இருவரும் இந்திய பந்துவீச்சுப் பிரிவை தங்கள் தோள்களில் சுமக்க உள்ளனர்.
சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம் பெறும் உத்தேச வீரர்கள் இதோ..
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், திலக் வர்மா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ்.