ஒவ்வொரு நபரும் தங்கள் வேலை அல்லது தொழிலில் தொடர்ச்சியான முன்னேற்றத்தை விரும்புகின்றனர். தங்கள் குடும்பத்தினரின் ஒவ்வொரு விருப்பத்தை நிறைவேற்ற கடினமாக உழைக்கிறார்கள். ஆனால் சில நேரங்களில் அவர்கள் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைய முடிவதில்லை.
வாஸ்து சாஸ்திரத்தின் படி செல்வம், மகிழ்ச்சி, செழிப்பு ஆகியவற்றை அடைவதற்கு ஒரு வீட்டில் நேர்மறையான ஆற்றல் ஓட்டம் அவசியம். ஒருவர் தொடர்ந்து பல பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டால் அது வாஸ்து குறைபாடாக இருக்கலாம். செல்வம் மற்றும் சொத்து சேராமல் இருப்பதற்கான வாஸ்து காரணங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஈரப்பதமான சுவர்கள்
வீட்டின் சுவர்கள் ஈரமாக இருந்தாலும் அல்லது குழாய்களில் கசிவு ஏற்பட்டு கொண்டே இருந்தாலும் லட்சுமிதேவி அந்த குடும்பத்தினரை ஆசீர்வதிக்க மாட்டார் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. வீட்டில் ஈரப்பதம் வாஸ்து குறைபாடுகளை ஏற்படுத்தும் மற்றும் எதிர்மறை ஆற்றல்களை அதிகரிக்க செய்கிறது. அத்தகைய வீட்டில் பணம் ஒருபோதும் தங்காது.
தண்ணீர் செல்வத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. தண்ணீரை வீணாக செலவழிப்பது என்பது பணத்தை செலவழிப்பதற்கு ஒப்பாகும். மேலும் தண்ணீர் கசியும் வீடுகளில் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியமும் மோசமாக பாதிக்கப்படுகிறது.
கூரையை சுத்தம் செய்தல்
பல ஆண்டுகளாக கூரையை சுத்தம் செய்யாமல் இருப்பது, பழைய பொருட்கள், மின்னணு உபகரணங்கள், தேவையில்லாத பாத்திரங்கள், உடைந்த பொருட்களை பரணில் வைத்திருப்பது வாஸ்து குறைபாடுகளை உருவாக்குகிறது. மேலும் வீட்டில் எதிர்மறை ஆற்றல்களையும் அதிகரிக்கிறது.
எனவே வீட்டின் கூரைகளை முழுமையாக சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பரண்களை அவ்வப்போது சுத்தப்படுத்தி வீட்டை தூய்மையாக வைத்திருப்பது என்பது லட்சுமி தேவியை மகிழ்விக்கிறது.
முட்கள் நிறைந்த செடிகள்
வீட்டிற்குள் முட்கள் நிறைந்த அல்லது காயம் ஏற்படுத்தும் வகையிலான செடிகளை நடுவதை வாஸ்து சாஸ்திரம் பரிந்துரைப்பதில்லை. இது நிதி சார்ந்த பிரச்சனைகள் மற்றும் நிதி இழப்புகளுக்கு வழிவகுக்கும். மேலும் குடும்பத்தின் அமைதியையும் சீர்குலைத்து மோதல்களை ஏற்படுத்தி வீட்டின் அமைதியை குறைக்கின்றன. இந்த செடிகள் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
புறா கூடு
வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டின் எந்த பகுதியிலும் புறா கூடு கட்டப்பட்டால் அது நிதி இழப்பின் அறிகுறியாக கருதப்படுகிறது. இதன் காரணமாக ராகு மற்றும் கேது போன்ற கிரகங்களின் எதிர்மறை விளைவுகளை வீட்டு உரிமையாளர்கள் சந்திக்க நேரிடும் என்று நம்பப்படுகிறது. புறாக்கள் தொடர்ந்து உங்கள் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தால் அவற்றை உடனடியாக விரட்டி விடுங்கள்.
துடைப்பம்
வாஸ்து சாஸ்திரத்தில் துடைப்பம் லட்சுமிதேவியின் சின்னமாக கருதப்படுகிறது. துடைப்பத்தை வைப்பதற்கு பல விதிகள் மற்றும் வழிமுறைகள் உண்டு. துடைப்பத்தை கண்ணுக்குத் தெரியாத இடத்தில் வைக்க வேண்டும். அவற்றை சுவற்றில் சாற்றியபடி வைக்க கூடாது. இது செல்வ பற்றாக்குறைக்கு வழி வகுக்கலாம் அல்லது அலட்சியமாக கையாளுதல் கூடாது. துடைப்பங்களை எப்போதும் மறைவான இடத்தில் படுக்கை வசத்தில் வைக்க வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)