
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் அமைந்துள்ளது அழகிய மன்னார் ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயில். இந்தக் கோயிலின் சிறப்பே பெண்ணை ஆணாக மாற்றி பாமா ருக்மணி சமேதராக ஸ்ரீ ராஜகோபால சுவாமி காட்சியளித்தார். இதன் காரணமாக இத்தல இறைவன் பெண்ணை ஆணாக்கிய அழகிய மன்னார் என்று பெயர் பெற்றார். விஷ்ணு பிரியன் என்னும் அர்ச்சகர் தனக்கு ஆண் வாரிசு தேவை என்று கேட்டபோது மீண்டும் பெண் குழந்தை பிறந்ததால் பெருமாள் முகத்தில் தட்டை எடுத்து வீசிய ஆச்சு இன்னும் பதிந்திருப்பதாக கூறப்படுகிறது. கோயிலில் கதை வரலாறு சிறப்பம்சங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
முற்காலத்தில் சமுத்திரத்துக்கு நடுவே தோயமாபுரம் என்ற பட்டணம் இருந்தது. அங்கு வாழ்ந்த அரக்கர்கள் முப்பத்து முக்கோடி தேவர்களையும், முனிவர்களையும், உலக மக்களையும் மிகவும் துன்புறுத்தி வந்தனர்.இந்த நிலையில் பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனன் இந்திர லோகத்துக்குச் செல்ல விரும்பினான். அதன்பொருட்டு தேவேந்திரனிடம் அனுமதி வேண்டினான். அதற்கு இந்திரன், அர்ஜுனா நீ தாராளமாக இந்திரலோகத்துக்கு வரலாம். அதற்கு முன்பு நீ செய்யவேண்டிய காரியம் ஒன்று உள்ளது. கடலுக்கு நடுவில் உள்ள தோயமாபுரத்தில் வாழும் அரக்கர் கூட்டத்தை நீ அழித்து, தர்மத்தை நிலைநாட்டிட வேண்டும் என்று கூறினார்.அர்ஜுனனும் இந்திரன் கூறியபடியே தோயமாபுரத்துக்குச் சென்று அரக்கர்களை எதிர்த்துப் போரிட்டான். ஆனால் அவர்களை வெல்வது அவ்வளவு எளிதாக இல்லை. அரக்கர்களை அழித்தாலும், அவர்கள் மீண்டும் எழுந்து வந்து போரிட்டனர்.
அர்ஜுனன் செய்வது அறியாமல் திகைத்து நின்றான். அப்போது வானில் இருந்து, அர்ஜுனா, அசுரர்கள் உன்னை கேலி செய்தால் மட்டுமே அவர்களை நீ வெல்ல முடியும். இதுதான் அவர்கள் பெற்றிருக்கும் வரம்' என்று ஓர் அசரீரி ஒலித்தது.உடனே அர்ஜுனனின் மனதில் சட்டென்று ஒரு திட்டம் உதித்தது. போரில் தோற்றுப் புறமுதுகு காட்டி ஓடுவதுபோல அர்ஜீனன் ஓடினான். அதைக் கண்ட அசுரர்கள் அர்ஜீனனை பார்த்து கேலிசெய்து கைதட்டிச் சிரித்தார்கள். அர்ஜுனனும் இதைத்தானே எதிர்பார்த்தான். உடனடியாக, தன்னிடமிருந்த பாசுபத அஸ்திரத்தை ஏவி ஒட்டுமொத்தமாக அரக்கர் கூட்டத்தை கொன்று குவித்தான்.அர்ஜுனனின் இந்த வீரதீரச் செயலை மனதாரப் பாராட்டியதோடு, அதுவரை தான் வணங்கி வழிபட்டு வந்த ராஜகோபாலர் விக்கிரகத்தையும் அவனுக்கு பரிசாக கொடுத்து சிறப்பித்தான் தேவர்களின் தலைவன் இந்திரன். அந்த ராஜகோபாலரை அனுதினமும் பயபக்தியோடு வணங்கி வழிபட்டு வந்தான் இந்திரன். பிற்காலத்தில் அந்த விக்ரகம் இந்திரனால் பெருமாள் திருவுளப்படி கங்கையில் சேர்பிக்கப்பட்டது.
பின் ஒரு நாள் தென்னகத்திலிருந்து புனித நீராட வந்த பல்கி என்னும் பாண்டிய மன்னனன் கங்கையில் நீராடிய பொழுது இவ்விக்ரகம் அவரது கைகளில் கிடைக்கப்பெறுகிறது.பாண்டிய மன்னன் அந்த விக்ரகத்தின் எழிற்கோலத்தைக் கண்டு பேரானந்தம் அடைகின்றான். அதனை தன் ஆட்சிக்குட்பட்ட தென்தமிழகத்துக்குக் கொண்டு வந்து, தாமிரபரணிக் கரையில் எழுந்தருளச்செய்தான். சுவாமிக்கு கருவறையுடன் கூடிய அழகிய திருக்கோவிலை நிர்மாணித்து, ராஜகோபாலர் என்ற திருப்பெயர் சூட்டி வழிபட்டு வந்தான். அந்தக் கோவிலில் தற்போது உயர்ந்த புகழ்பெற்ற திருக்கோவிலாக விளங்குகிறது.இந்திரலோகத்து கோபாலனே இங்கு எழுந்தருளி நமக்கு காட்சியளித்துக்கொண்டிருக்கிறார். இதனை மெய்ப்பிக்கும் வகையில் இங்குள்ள ராஜகோபாலர் திருமேனி மிகவும் பழமை வாய்ந்ததாக காட்சியளிக்கிறது. முகத்தில் திருநாமம் சாத்தப்பட்ட வடுவே பெரிதாக தெரியும். இருந்தும் இவர் இடைநெளித்து நிற்கும் கோலத்தை காண கண்கள் கோடி வேண்டும்.
முற்காலத்தில் இக்கோயிலில் விஷ்ணுப்ரியன் என்னும் அர்ச்சகர், பெருமாளுக்கு தினமும் பூஜை செய்யும் கைங்கரியத்தை செய்து வந்தார். திருமணமாகிவிட்ட விஷ்ணுப்ரியனுக்கு தொடர்ச்சியாகப் பெண் குழந்தைகளாகபவே பிறந்தன. இதனால் தனக்குப் பின்னர் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்ய ஓர் ஆண் குழந்தை இல்லையே என விஷ்ணுப்ரியன் வருத்தப்பட்டு கொண்டே இருந்தார். தனக்கு எப்படியாவது ஒரு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என கோபாலசுவாமியிடம் பிரார்த்தனை செய்து கொண்டே இருந்தார் அவ்வர்ச்சகர்.இந்நிலையில் அவரது மனைவி கலாவதி மீண்டும் கர்ப்பம்தரித்தாள். இந்தமுறை எப்படியும் பெருமாள் அருளால் நிச்சயம் தனக்கு ஓர் ஆண் குழந்தை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தார் விஷ்ணுப்பிரியன்.
இறுதியாக இம்முறையும் கலாவதி பெண் குழந்தையே பெற்றெடுத்தாள். இதனால் கோபம் கொண்ட விஷ்ணுப்ரியன், பெருமாள் மீது கையிலிருந்த ஆரத்தித் தட்டை வீசியெறிந்தார். அத்தட்டு பெருமாளின் மூக்கின் மீது பட்டதால் பெரிய தழும்பு ஏற்பட்டது. அதே கோபத்துடன் விஷ்ணுப்ரியன் வீட்டுக்கு சென்றுவிட, அங்கோ பிறந்த பெண் குழந்தை, ஆண் குழந்தையாக மாறியிருந்தது. அதைப் பார்த்து பதறிப்போன விஷ்ணுப்ரியன், கோயிலுக்கு சென்று, தனது செயலை எண்ணி வருந்தி பெருமாளின் கால்களில் விழுந்து அழுது மன்னிப்பு கேட்டார் . இதன் காரணமாகத்தான் இந்த சுவாமிக்கு "பெண்ணை ஆணாக்கிய இராஜகோபாலன்" என்ற பெயர் வந்ததாக கூறுகிறார்கள். இன்றும் ராஜகோபாலர் திருமேனியில் மூக்கில் காயம்பட்ட பெரிய தழும்பை நாம் காணலாம். எனவே இங்கு புத்திரபாக்கியம் வேண்டி வழிபடுவது சிறப்பு பலன்களை தரும் என்று நம்பப்படுகிறது.
விரைவில் திருமணம் நடைபெறும் என்றும் திருமணத்தடை நீங்கும் என்றும் கூறப்படுகிறது. பாக்கியம் இல்லாதவர்களுக்கு இங்கு வந்து வேண்டிக் கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது தீராத நோய்களும் கோயில் உள்ள கோடி புண்ணிய தீர்த்தத்தில் குளித்தால் நோய்களும் தீரும் என்று சொல்லப்படுகிறது. இங்கு பிரார்த்தனை செய்து கொண்டு நிறைவேறிய மக்களுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாத்துகிறார்கள்.
11 நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் மற்றும் 7 தூண்கள், 7 பிரகாரங்களால் அமைந்து, "மன்னார்குடி மதிலழகு" என்று போற்றப்படுகிறது. மூலவர் ஸ்ரீ வாசுதேவப் பெருமாள், செங்கமலத் தாயாருடன் வீற்றிருக்கிறார். உற்சவர் ராஜகோபாலசுவாமி, ருக்மணி மற்றும் சத்யபாமாவுடன் அருள்பாலிக்கிறார். செங்கமலத் தாயார் சன்னதி, செண்பக விநாயகர், ஆஞ்சநேயர் மற்றும் பெண் வடிவ கருடாழ்வார் சன்னதிகள் உள்ளன. இக்கோயிலின் தீர்த்தம்ஹரித்ரா நதி என்று கூறப்படுகிறது புனித தளங்களில் இது ஒன்றாக கருதப்படுகிறது.முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டத் தொடங்கப்பட்ட இக்கோயில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.